பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

478

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



தாங்களே முக்கியம். தாங்களே வாழவேண்டும். தங்களுக்குச் சமூகத்தில் எந்தவிதப் பொறுப்பும் இல்லை என்று வாழ்பவர்களின் எண்ணிக்கை பெருகி வளர்கிறது. இவர்கள் மக்கள் அல்லர் மாக்கள்! மனித உருவில் நடமாடும் விலங்குகள். இத்தகைய மனிதர்கள் மனம் மாறி மனித சமுத்திரத்திற்குள் குதித்து ஒருவரையொருவர் புரிந்து கொண்டு இருவரும் அல்லது பலரும் கைகோத்துக் கரையேறுவதே வாழ்க்கையின் சுதந்திரம்; இலட்சியம். ஆன்மா - உயிர் இத்தகைய பரிபக்குவத்தை அடைதலே ஆன்மிகம். சுதந்திரம் என்பது தூய்மையானது. அதாவது நம் ஒவ்வொருவருடைய சுதந்திரமும் ஆன்ம சுதந்திரமும் சமுதாயத்தையே சார்ந்து நிற்கிறது; வளர்கிறது. உலக வரலாற்றைக் கூர்ந்து நோக்கின் ஒவ்வொரு சுதந்திர வரலாறும் இந்த உண்மையைக் கூறுகிறது. மனித சமூகத்தையே பரம்பொருளாக விசுவ புருஷனாகக் கண்ட பெரியவர்கள் உண்டு. மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது முக்கியமல்ல. மக்களுக்கு நன்மை செய்வதே உண்மையான இலட்சியமாக இருக்கவேண்டும். மனிதன் மக்களுக்கு நன்மை செய்வதன் மூலமாவே தான் மிருகமல்ல; மனிதன் என்பதை உணர்த்துகின்றான்.

மனிதன், தனிமனிதனாக வாழும் வரை முன்னேற்றம் இல்லை. அவனுடைய ஆன்மாவும் முன்னேறாது. மனிதன் சமூகத்தில் கலக்கவேண்டும். மானிட சமுத்திரத்தில் சங்கமமாக வேண்டும். நீர்த் திவலைகள் கடலுடன் கலந்து ஒன்றாகியிருக்கும்போதே கடல் என்ற மதிப்புக் கிடைக்கிறது. அதுபோலத்தான் மனிதனும் சமூகத்திற்குள் கலந்து சமூகத்தில் ஓர் உறுப்பினனானால் அவனது ஆன்மா முழுமை பெறுகிறது.

ஆன்மாவின் அறிகருவிகள் நான்கு அவை மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியன. இவற்றுள் மிகவும் சக்தி வாய்ந்தது மனம், மனம், தண்ணீரைப்போல எப்போதும்