பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


விலங்குகள், பறவைகள் முதலியனவும் உரியவாறு பாராட்டுப் பெற்றுள்ளன; பேணப் பெற்றுள்ளன! ஏன்? மதுரைத் திருக்கோயில், திருவானைக்காத் திருக்கோயில் முதலியவற்றில் இறைவனை யானைகள் பூசித்துள்ளன. திருவான்மியூர்த் திருக்கோயிலில் பசு பூசித்திருக்கிறது! மற்றும் பிற திருத்தலங்களில் சிலந்தி, குரங்கு, நண்டு ஆகியவைகளும் பூசித்துள்ளன என்ற வரலாறுகள் உண்டு. கரிக்குருவிக்கு மதுரைத் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஆலவாயண்ணல் உபதேசித்தார் என்றெல்லாம் திருக்கோயில் வளாகத்திலிருந்து வெளிவரும் செய்திகளை நோக்கும் பொழுது

“காக்கை குருவி எங்கள் சாதி - நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்”

என்ற பாரதியின் பாடலுக்கு ஊற்றுக் கண்ணாக அமைந்தது, தமிழ்நாட்டின் திருக்கோயில் தத்துவம் என்று எண்ணத் தோன்றுகிறது.

பரிவின் உறைவிடம்

திருக்கோயில் வளாகத்தில் இறைவன், “பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து” அருள் செய்யும் காட்சி, மாட்சிமை மிக்குடையது! திருச்சிராப்பள்ளித் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவன், பேறு காலத்தில் அல்லல்பட்டிருந்த பெண்ணுக்கு, ஈன்ற தாயாக அருகிலிருந்து மகப்பேற்றுக்குத் துணை செய்தான் என்ற வரலாறு, திருக்கோயில் இயற்றிய சமுதாயப் பணிகளுக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.

நிதி

திருக்கோயில் தத்துவத்தில் பொன்னுக்கும் பொருளுக்கும் இடமுண்டு. பொன்னும் பொருளும் வெறுக்கத்