பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இன்னும் சொல்லப் போனால் தத்துவ அடிப்படையில் எல்லா ஓசை ஒலிகளுக்கும் மூலம் - நாத தத்துவம். இந்த நாத தத்துவத்தையும் கடந்த விழுப்பொருள் சிவம். அதனால் சிவத்திற்கு உரிய மொழியென்றும், விருப்பமான மொழி யென்றும் ஒன்றும் இல்லை. ஆதலால் இறைவனுக்கு ஒரு மொழிச் சார்பு கூறுதல் நன்றன்று. இறைவன் திருவருள் நிகழ்ச்சிகள் அனைத்தும் உணர்த்துதலேயாம். அத்திருவருள் உணர்த்திய உணர்வை உய்த்து உணர்ந்த நிறைமொழி மாந்தர்கள், அதனை மொழிகளில் வெளிப்படுத்தித் தந்தருள்வர். இதனையும் விஞ்சி, பரமசிவத்துக்கு மொழி உண்டெனத் துணிந்து ஆராயப்புகின், பரமசிவத்தின் மொழி தமிழேயாம்! இவ்வாறு தமிழே என்று துணிய, சான்றுகள் பல உள்ளன. சீகாழியில் திருஞானசம்பந்தர் அழ, பெருமானின் திருக்குறிப்பின் வழி, பெருமாட்டியார் திருமுலைப்பால் சுரந்து சிவஞானத்தைக் குழைத்து ஊட்டினார்கள். உடன், திருஞான சம்பந்தர் “தோடுடைய செவியன்” என்று எடுத்துத் திருநெறிய தமிழ் பாடியருளினார். அன்னை பராசக்தியின் திருமுலைப்பாலும் சிவஞானமும் திருஞானசம்பந்தருக்குத் தமிழறிவையே தந்தன என்பது தானே உண்மை! அதனால் அம்மையப்பரின் மொழி தமிழ் என்றும், சிவஞானம் தமிழ் தழீஇயது என்றும் கூறுவது மிகையன்றல்லவா?

மேலும் சம்ஸ்கிருத நான்மறையோர்கள், இறைவனின் திருவுளக் குறிப்பறியாமல் அவன் திருமுன்பில் வலுக்கட்டாயமாக மறைகளை ஓதுகின்றனர். அவைகளால் அவனுக்கு இனிய ஓசையும் கிடைக்கவில்லை; பொருளும் கிடைக்கவில்லை; அதோடு இட முரண்பாடும் மலிந்து இருந்தமை உணரலாம். இதனால் சலிப்படந்த இறைவன், திருஞானசம்பந்தருக்கும் திருநாவுக்கரசருக்கும் காசுகள் தந்து தமிழிற் பாடச் சொல்லிக் கேட்கின்றானோ என்னவோ? இதனைச் சுந்தரர் தேவாரத்தால் அறிய முடிகிறது.