பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

85


ஊதிய உயர்வுகள், ஊதியச் சீரமைப்புகள் இவற்றுக்காகப் போராடிப் போராடி வந்துள்ளனர். படிப்படியாக வெற்றியும் பெற்று வந்துள்ளனர். ஊதிய உயர்வில் வெற்றியா? வாழ்க்கையில் வெற்றியா? வெற்றி, வாழ்க்கையில் அல்ல! ஊதிய உயர்வு என்ற பெயரில் பணத்தை எண்ணியதுதான் மிச்சம்! ஏன்? நமது நாட்டின் நிதிநிலையால் பண்டங்களின் விலை மதிப்புக் கூடி வருகிறது. நாணயத்தின் மதிப்புக் கீழிறங்கி வருகிறது. பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. கணக்கில் வாராக் கருப்புப் பணம் கணக்கில்லாமல் நாட்டில் புழங்குவதால் நாணயத்தின் மதிப்பை நிலைநாட்ட முடியவில்லை. விலையேற்றத்தையும் தடுக்க முடியவில்லை. இந்தியப் பொருளாதாரம் தெள்ளிய நீரோடைபோல் அல்லாமல் குழம்பிக்கிடக்கிறது.

இந்த குழப்பத்தினால் மிகுதியும் பாதிக்கப்படுபவர்கள் கிராமப்புறத்து மக்கள். அவர்கள் நிலையான வேலையும் நிலையான-உத்தரவாதமான ஊதியமும் பெறாமல் அல்லலுறுகின்றார்கள். படித்தவர்கள், ஊதிய உத்தரவாதத்துடன் பணிகளில் அமர்ந்திருப்பவர்கள் மேலும் மேலும் ஊதிய உயர்வு கோரிப் போராடிப் பெற்று வருகின்றனர். அரசுகள் அவர்களின் மன நிறைவைப்பெறக் கருதியும் தேர்தல் உத்தியாகவும் ஊதிய உயர்வுகளை அள்ளி வழங்கிக் கொண்டு வந்தன. இப்போதுதான் நடுவணரசுக்கு இந்தச் சீரற்ற நடைமுறை கவனத்திற்கு வந்துள்ளது. உடன் கூடுதல் நேர வேலைக்குரிய ஊதியம் முதலியவற்றைக் கைவிட முன்வந்துள்ளது. அதற்காக ஆயுட்காப்பீட்டுக் கழகத் தொடர்பாக ஓர் அவசரச் சட்டத்தையும் பிறப்பித்துள்ளது. இந்தச் சட்டத்தை ஆயுட் காப்பீட்டுக் கழக அலுவலக ஊழியர்கள் எதிர்த்துப் போராடி வருகின்றனர். நாடு முழுவதும் இதுபற்றிய விவாதம் நடந்து வருகிறது.

கூடுதல் நேரப் பணி ஊதியம் தருதல் கொள்கையளவில் தவறில்லையானாலும் கடமை உணர்வும் ஒழுக்க

கு.xiii.7.