பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

95



கல்வி

இந்தியாவில் நகர்ப்புறத்தில் வாழ்கின்றவர்கள் பெறும் கல்விக்கும் கிராமப்புறங்களில் வாழ்கின்றவர்கள் பெறும் கல்விக்கும் நிறைந்த வேறுபாடுகள் காணப்படுகின்றன. நகர்ப் புறத்தார் பெறும் தரமான கல்வியைக் கிராமப்புறத்தார் பெறுவதில்லை. கிராமப்புறத்தில் உள்ள பள்ளிகள், குழந்தைகளை அடைத்து வைக்கும் இடங்களாக உள்ளன. உயிர்ப்புள்ள குழந்தைகள் உள்ள இடங்களாக இல்லை. பள்ளிகளுக்குள்ள வசதிகள் போதா. ஆசிரியர்-மாணவர் விழுக்காடு கட்டுக்கடங்காமல் உள்ளது. எட்டு வயதுவரை ஒரு குழந்தைக்குச் சீரான கல்வி அளிக்கப் பெற்றால் அக்குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பது உளவியல் விதியாகும். கிராமங்களின் 1 முதல் 3 வரை படிக்கும் குழந்தைகள் உள்ள பள்ளிகளில், ஆசிரியர்-மாணவர் விழுக்காடு 1:60, 1:70 இந்தக் கணக்கில் உள்ளது. இதைப் பள்ளிக்கூடம் என்பதா? குழந்தைகளை அடைக்கும் பட்டி என்பதா? கிராமப்புறப் பள்ளிகளில் ஆசிரியர்மாணவர் விழுக்காடு 1:25 என்ற முறையில் அமைத்தல் வேண்டும். கிராமப்புறப் பள்ளிகளில் தரமான அர்ப்பணிப்பு நோக்குடன் பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பெறவேண்டும். இப்பள்ளிகளில் நூலகம், இயந்திரத் தொழிற் கருவிகள், குழந்தைகளின் அறிவியல் தொழில் நுட்பத் திறனை வளர்க்கும் கருவிகள் இடம்பெறவேண்டும். கிராமப்புறப் பள்ளிகளின் வேலை நேரம், பாடவேளை அட்டவணைகள் கிராமத்தின் சூழ்நிலைக்கும் கிராமத்துக் குடும்பங்களின் சூழ்நிலைக்கும் ஏற்றவுாறு அமைதல் வேண்டும். கிராமப்பள்ளி 1 மணி நேரம் குறைவாக நடைபெற்றாலும் பரவாயில்லை. ஆனால் தரமாக நடத்தப்பெற வேண்டும்.

தொடக்கப் பள்ளியில் பயிலும் கிராமப்புறக் குழந்தைகள் மதிய உணவுக்கு வீட்டுக்குச் செல்ல இயலாது.