பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழி

221


கொள்ளும்; பழக்கம் மூலம்தான் நம்பிக்கை வளரும்; நல்லெண்ணம் வளரும்; நட்பு கால்கொள்ளும். உறவு தழைக்கும்; ஒருமைப்பாடு நிலவும். இந்த இனிய ஒப்புரவுப் பண்பாட்டுக்குத் துணையாகக் கற்கும் மொழிகள் அமைய வேண்டும். எந்த மொழி ஒருவரைப் பலருக்கு உறவாக்குகிறதோ அந்த மொழியை முயன்று கற்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட பல மொழிகளைக் கற்பது மானிடத்திற்கு நல்லது.

இந்தியா ஒரு பெரிய நாடு. பல மொழிகள் பேசும் மக்கள் வாழும் நாடு. நமது நாட்டிற்கு உணர்வு பூர்வமான ஒருமைப்பாடு தேவை. இந்த ஒருமைப்பாட்டை, அவாவி வாழும் ஒழுக்க உணர்வின் வாயிலாகத்தான் உருவாக்க முடியும்; வளர்க்க முடியும். இதற்கு நாம் கற்கும் மொழிகள் துணைசெய்தல் நல்லது.

ஒரு மனிதன் எந்த மொழியைக் கற்பது என்ற வினா எழுமானால் ஐயத்திற்கிடமின்றிக் கிடைக்கக் கூடிய முதல் விடை அவனுடைய தாய்மொழி என்பதே. தாய் மொழியை ஆரம்பக் கல்வியிலிருந்து பல்கலைக் கழகம் ஈறாக ஆய்வு நிலயில் கூடப் பயிற்று மொழியாகவும் எழுதும் மொழியாகவும் கற்கும் மொழியாகவும் இருக்க வேண்டும். இது மனிதவியல் விஞ்ஞானத்தின் தெளிந்த முடிவு. இந்த வகையில் தமிழகம் பின்தங்கியிருக்கிறது என்பதை நாம் உணர்ந்து, தமிழை துறைதோறும் பயிற்று மொழியாகக் கொண்டு வர வேண்டும்.

அடுத்து, பிற மொழிகளைக் கற்பது என்பது நல்லது; வரவேற்கத்தக்கது. இங்ஙனம் கற்கும் பல மொழிகள் ஆய்வுக்கும் உறவுக்கும் பயன்படும். ஆனால் எந்த ஒரு மொழியையும் மக்கள் விரும்பிக் கற்குமாறு செய்வதே நல்ல மரபு. தமிழ் மக்கள் இந்த ஒப்புரவைக் காணத்தக்க வகையில் இந்திய மொழிகளையும் உலக உறவுகளையும் வளர்த்துக்