பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கொள்ளும் வகையில் உலக மொழிகளையும் கற்க முன்வர வேண்டும். விரும்பிக் கற்பது என்பது எதிரதாகக் காத்துக் கொள்ளும் சமுதாய விழிப்புணர்வுடையோருக்கே உரியது. சாதாரண மக்கள் எளிதில் விழிப்படைய மாட்டார்கள். அவர்களை விருப்பமுறச் செய்வதும் அதற்குரிய நயத்தக்க மரபுகளைக் கடைப்பிடிப்பதும் தவிர்க்க முடியாதவை. இந்தியாவின் முதல் தேவை ஒருமைப்பாடேயாம். இரண்டாவது இடத்திலேயே மொழி இருக்க வேண்டும். இந்த விழுமிய கோட்பாட்டை நினைவிற் கொள்ள வேண்டும்.


43. [1]தாய்மொழி

க்கள் இனத்தின் அறிவு வளர்ச்சிக்கு, அவ்வினத்தின் தாய்மொழி வளர வேண்டும். அத் தாய்மொழியில் அந்த மக்கள் நல்ல அறிவைப் பெற வேண்டும். பாவேந்தன் இத்துறையில் அதிக அக்கறை காட்டினான். “தமிழ்நாட்டின் தெருக்களிலே தமிழ் இல்லையே!” என்று கவலைப்பட்டான்! தமிழ் நாட்டு மக்கள் நாலுபேர் கூடினால் சமுதாய இயலை, அறிவியலை பொருளியலைப் பற்றிச் ‘சள சள’ எனப் பேசிட வேண்டும் என்று அவன் எண்ணினான். அந்த எண்ணத்தை நிறைவேற்றிட நாம் அனைவரும் அரசியற் கட்சி வேறு பாடின்றி முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இன்று மக்களிடத்தில் ஆழமான அறிவு நாட்டமில்லை. கவர்ச்சிகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர். திரைப்படக் கொட்டகைகளிடத்திலேயே நாட்டை ஒப்படைப்புச் செய்து விடுவோம்போல இருக்கிறது. அன்பு கூர்ந்து நல்ல தமிழ்நெறி நாட்டில் பரவ உரிய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். தமிழ் வளர்ந்தால் தமிழன் வாழ்வான், தமிழினம் நிலைத்து வாழும், அதனாலன்றோ.


  1. மனம் ஒரு மாளிகை