பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழி

293


ஆங்கிலம் நம்மைத் தொடர்ந்து ஆட்சி செய்யும். அதனால் தமிழ் வளம் குன்றும். தமிழினத்தின் சிந்தனைத்திறன் வளராது. அறிவியல் வளராது. இயல்பாகவே, நமது தமிழினத்தின் அயல்மொழி அறிவு பெற்றுவிட்டால், தாய்மொழி அறிவை வளர்த்துக் கொள்ள மறந்துவிடும் மனப்பாங்கு இருந்து வருகிறது.

ஆங்கிலம் மட்டுமே தெரியும். அல்லது ஆங்கிலமும் தெரியும் என்று பலர் காட்டிக் கொள்ள விரும்புவர். இது இந்தி மொழியாளரிடமில்லாத – தமிழினத்தாரிடம் மட்டுமுள்ள ஒரு குறை. இக்குறை நீங்கினால்தான் அயல் மொழியறிவு தமிழுக்குப் பயன்படும்; தமிழ் இனத்திற்குப் பயன்படும். தமிழறிவு, தமிழ்வளம் பிற மொழியினருக்குப் பயன்படும். மேலும் தமிழர்களிடத்தில் ஆங்கிலத்தில் திறமையுடையார் – ஆங்கிலத்தில் திறமை இல்லாதார் என்ற இரண்டு சாதிகள் உண்டாகும.

தெளிவாகச் சொன்னால் பெருவாரியான தாழ்த்தப்பட்ட – பிற்பட்ட தமிழ்க்குடியினர் முன்னேற முடியாது. எனவே, பாரத நாட்டின் மொழிச் சிக்கலுக்கு நிலையான தீர்வு, அறிஞர் அண்ணா கூறியபடி பாரதநாட்டின் நாட்டு மொழிகள் அனைத்தும் ஆட்சி மொழியாவதுதான் என்ற உண்மையில் உறுதியாக நிற்கவேண்டும். அறிஞர் அண்ணாவின் கொள்கையே தமிழகத்தின் கொள்கையாக உருப்பெற வேண்டும். இக்கொள்கையினின்றும் நாம் பிறழ்வது அல்லது விட்டுக் கொடுப்பது தமிழகத்திற்கு நன்மை தராது. இங்ஙனம் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளை ஆட்சிமொழியாக்கு வதில் இடர்ப்பாடுகள் இருக்கலாம். ஆனால் வளர்ந்து வரும் அறிவியலின் முன்னே அவ்விடர்ப்பாடுகள் பெரிதல்ல.

இன்று ஒரு மொழியில் பேசுவதை இன்னொரு மொழியில் சொல்லும் கருவி அமைத்தல் எளிதே. அதுபோலவே மொழி பெயர்ப்புக் கருவியும் காணமுடியும்.

கு.xiii.20.