பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

349


நபருக்கு ஒரு மரம் என்ற நியதி பின்பற்றப் படுதல் வேண்டும். பிள்ளைப் பிறப்பு திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளிலும் சுதந்திர தினம் குடியரசு தினம் முதலிய தேசியத் திருநாள்களிலும் திருக்கோயில் திருவிழாக் கொடியேற்று நாளிலும் திட்டமிட்டு மரங்களை நட்டு வளர்க்கும் மரபு - பழக்கம் தேவை. இந்த மரங்கள் பெரும்பாலும் உயரமானதாக பரந்து வளரக்கூடியனவாக வேப்பமரம், வாகை முதலியனவாக நடுதல் நல்லது. கிராமத்தின் தேவைக்கேற்ப ஓரளவு புளிய மரங்கள் நடலாம். பணம் தருவனவாகிய தென்னை, முந்திரி முதலியனவும் நடலாம். வீடு கட்டப் பயன்படக்கூடிய தேக்கு, மூங்கில், நாட்டுப் பூவரசு, பனை முதலிய மரங்களையும் நடலாம். கிராமங்களில் ஒரு ஏக்கர் முதல் மூன்று ஏக்கர் வரை (முந்திரி, தென்னை) மரம் வளர்க்கலாம். இது ஒரு தொழிலாகவே அமையும்.

சாண எரிவாயு அடுப்பு

மேலும் கிராமப்புறங்களில் சமையலுக்குரிய எரிசக்திப் பிரச்சனை - கடுமையான பிரச்சனையாக இருக்கிறது. கிராமத்தின் கால்நடைகளின் - மக்களின் கழிவுப் பொருள் களைக் கொண்டே "சாண எரிவாயு (Bio-gas) அடுப்புத் தயாரித்தல் நல்லது ஒரு வீட்டுக்கு மாடுகள் அல்லது 15 நபர்கள் இருந்தால் இந்தச் சாண எரிவாயு அடுப்பு அமைக்கலாம். புகை வராது; எரி ஆற்றலும் அதிகம் கிடைக்கும். சாண எரி வாயு அடுப்பில் உபயோகப்படுத்தப் பட்ட கழிவுப் பொருள், வீரியம் மிகுந்த உரம், வேளாண்மைக்குப் பயன்படுத்தலாம். இந்த அரசுகளும் 3-ல் ஒரு பங்கு மான்யம் வழங்குகின்றன. மீதியை வங்கிகள் கடனாகத் தந்து உதவுகின்றன. சாண எரிவாயு அடுப்பு அமைப்பதன் மூலம் கால்நடைகள் வளர்த்தல், கால்நடைகள் வளர்த்தல் மூலம் வீட்டுக்குப் பால் முதலிய பொருள்கள், இறைச்சி ஆகியன கிடைப்பதுடன் மரங்கள் வெட்டப்