பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

409


இயலும். அதனாலேயே மானுட வாழ்க்கையையே “ஆன்மிக வாழ்க்கை” என்று சிறப்பித்து நமது முன்னோர்கள் வளர்த்தனர். நமது ஆன்மிகம். அறிவியற் சார்புடையதேயாம். ஆனால் காலப்போக்கில் ஆன்மிகம் பயனற்ற சடங்குகளில் சிக்கி, பகுத்தறிவுக்கும் ஞானத்திற்கும் விடை தந்துவிட்டது. ஆன்மாவின் தரத்தை வாழ்நிலையின் சிறப்பை உயர்த்துவதற்கே கடவுள் வழிபாடு. தத்துவ ஞானம், சமயம் எல்லாம்! ஆனால் இன்றோ ஆன்மிகம், சமயம் ஆகியன ஆன்மாக்களுக்குப் புலமும் நெறியும் காட்டி வளர்க்கும் பணியைச் சிறப்பாகச் செய்யவில்லை என்ற வேதனையை வெளிப்படுத்துவது பொழுதுபுலரத் துணை செய்யும் அல்லவா?

அடுத்து, மனிதத்தை வளர்க்கும் பணியில் பங்கேற்கும் இயற்கையை அறிந்தோம்! இந்த இயற்கையைத் தழுவிக் கொண்ட நிலையில் வளரும் மனிதனையும் கண்டோம். இவ்வளவும் சிறப்பாக அமைந்தாலும் –'மனிதம்' – வாழும் மனித சமுதாய அமைப்பு சிறப்பாக அமையாவிடில் எத்தனை வளம் பெற்றிருந்தாலும் அனைத்தும் பாழே! தனி மனிதனே சமுதாயத்தில் தாக்கத்தை – பாதிப்பை உண்டாக்குகின்றான் என்பது ஒரு சிநதனை! இல்லை, சமுதாய அமைப்பும் நிகழ்வுமே தனி மனிதனிடத்தில் தாக்கங்களை ஏற்படுத்தி இயக்குகின்றன. தனி மனிதன் சமுதாய அமைப்பின் அடிப்படையிலேயே வளர்கின்றான். வாழ்கின்றான் என்பது ஒரு கொள்கை. இதனை,

“ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர்
பலர்யாம் வாழும் ஊரே!”

என்னும் புறநானூறு.

“மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு”

–குறள் 454

என்னும் திருக்குறள் ஆகியவற்றால் அறிக! உணர்க!