பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

421


திருக்கோயில்கள் முதலிய வழிபாட்டு நிறுவனங்கள் தோன்றின. ஆனால் இவற்றின் ஒட்டு மொத்தமான பயனென்ன என்று ஆராய்ந்தால் வேதனையே மிகும். அவை தத்துவமாக – வாழ்க்கை முறையாக இருந்தவரையில் பயன் விளைந்ததுண்டு. காலப்போக்கில் அவை நிறுவனங்களாக (Institution) உருமாறி வடிவம் பெற்ற பிறகு, மனித சமுதாயத்தை அருள்நெறியில் வழி நடத்தி அழைத்துச் செல்லும் ஆற்றலை இழந்து விட்டன. சடங்குகளே மிஞ்சின. சாரத்தைக் காணோம். உதடுகளே பேசுகின்றன. உள்ளம் பேசவில்லை. சமயப் பேரொளியைக் கவ்விச் சூழ்ந்திருக்கும் கருமேகத்தை அகற்றியாக வேண்டும். சமயம் சடங்கு ஆசாரக் காடுகளிலிருந்து விடுதலை செய்யப் பெற்றுத் தூய்மையான வாழ்க்கை முறைக்குக் கொண்டுவரப் பெறுதல் வேண்டும். வள்ளுவமும் "மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்" என்று அறை கூவி அழைத்துக் கூறியது. இறைவனை மாளிகையனைய கோவில்களில் எழுந்தருளச் செய்து விட்டு, மனிதன் ஒதுங்கித் தப்பித்துக் கொண்டு ஓடக்கூடாது. மனிதனுக்கு உண்மையில் கடவுள் நம்பிக்கை இருக்குமானால் முதலில் மனத்தைக் கோவிலாக்கட்டும்! மாதேவனை அங்கே கொலுவிருக்கச் செய்யட்டும். அதற்குத் துணிவில்லையேல் இவனுக்கென்ன உரிமை கடவுள் பெயரைக் கூறுவதற்கு?

சமய நெறியை வாழ்க்கையாக்காமல், பிழைப்பு நெறியாக்கும் பெருங்கேடு களையப் பெற்றாலே மனித சமுதாயம் செழித்து வளரும்; இன்பத்தில் தங்கித் திளைக்கும்!

54. [1]தமிழ் இனம்

காலத்தால் முன்னர்த் தோன்றிய மூத்த இனம் தமிழினம் என்பது இன்றைய வரலாற்று ஆசிரியர்கள் முடிபு.


கு.xiii.28.

  1. மண்ணும் விண்ணும்