பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

தவத்திரு குன்றக்குடி அடிகளார்
5. [1]மக்களாட்சி

விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டுக் கிடந்தது நமது பாரத தேசம். இந்த நாட்டு மக்கள் ஊமையராய். செவிடர்களாய்... உணர்வின்றி நெடு மரம் போல் வாழ்ந்தார்கள். ஆதிக்கக்காரர்கள் ஏறிச் சவாரி செய்வதற்கு இலாயக்காகக் கூனிக் குறுகி வாழ்ந்தார்கள். வாழ்க்கையில் வளம் இல்லை. ஆனால், வறண்ட வேதாந்தங்கள் உண்டு. மண்ணகத்து வாழ்வு பற்றிய அறிவு சூன்யம்; ஆனால் விண்ணகத்தைப்பற்றி ஆயிரமாயிரம் கற்பனைகள், எண்ணற்ற சமயங்கள். ஆனால் கிராமத்தில் அருளாட்சி இல்லை. அகத்திலும் புறத்திலும் இருளாட்சி செய்த காலம். இருள்கடிந்து எழுகின்ற ஞாயிறென பாரத சமுதாயத்தில் அண்ணல் காந்தியடிகள் தோன்றினார். அடிமைகளாக வாழ்ந்த நமக்குச் சுதந்திரம் வாங்கித் தந்தார். இல்லை-சுதந்திரமாக வாழவும் கற்றுக் கொடுத்தார். இந்நாடு சுதந்திரம் பெற்றது. நாமிருக்கும் நாடு நமதாயிற்று. நமக்காக நாமே ஆட்சி செய்யும் குடியாட்சியும் மலர்ந்தது. ஆயிரமாயிரம் ஆண்டுகள், வாழ்ந்து புகழ்பெற்ற சுதந்திர பாரத நாட்டின் குடிமக்களாக நாம் வாழ்வது முன்னைத் தவத்தின் விளைவேயாகும.

நாடு சுதந்திரம் பெற்றுவிட்டது. ஆனால், அந்நிய விளைவுகளை-அவற்றின் அடிச் சுவடுகளை அழித்து-மாற்றியமைத்துப் புதிய சமுதாயத்தை அமைக்கும் பெருங்கடமை நம் முன்னே நிற்கிறது. பிறர் வாழ்வதற்கென்றே நாம் பிரித்து வைக்கப்பெற்றோம். (ஒளி விளக்கில் வீழும் விட்டில் பூச்சிகளைப்போல) நம்மையே அழித்தொழிக்கக்கூடிய சாதி, இன, மத வேற்றுமைகளை ஏதோ புனிதமானவையெனக் கருதிப் போற்றி வளர்த்து வந்திருக்கிறோம். சுதந்திர பாரத சமுதாயம்


  1. பொங்கல் பரிசு