பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

446

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வேண்டும். இது சொத்துடைமைச் சமுதாயத்தில் நிலவும் உறவுமுறைச் சீர்கேடுகளைக் களைய உதவியாக இருக்கும். சொத்தும் பல்கிப் பெருகி வளரும். இன்று நமது சமுதாயத்தின் வரலாற்றுக்குக் களமாக விளங்குவனவும் நமது முன்னேற்றத்துக்கு உந்துசக்தியாக விளங்குவனவுமாகிய திருக்கோயில்கள் பல இடிபாடுகள் உடையனவாய் இருக் கின்றன. இந்தத் திருக்கோயில்களை எடுத்துத் திருப்பணி செய்து அத்திருக்கோயில்களை மையமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் திருப்பணியில் சொத்து பயன்படுத்தப்படுமானால் சமூக உறவுகள் விரிவாகும்.

மனித சமூக உறவுகள் இன்றியமையாதன. எந்தச் சூழ்நிலையிலும் உறவுகள் காப்பாற்றப்படுதல் வேண்டும். இந்தச் சமூக – மனித உறவுகளைப் பொருளாதாரம் சீரழிக்கிறது. இந்தச் சீரழிவிலிருந்து மனித – சமூக உறவுகளைப் பாதுகாக்க உரிய முயற்சிகள் எடுத்துக் கொள்ளப் பெறுதல் வேண்டும்.

சொத்தும் பொருளாதாரமும் மனித வாழ்க்கையின் சாதனங்களே தவிர, இலக்குகள் அல்ல; குறிக்கோள் அல்ல; பயனுமல்ல. சாதனங்களை வைத்துக் கொண்டு மனிதத்தை இழப்பது பேதைமை. சொத்துடைமைகள் மனிதனை, மனித உறவுகளை நிர்ணயிக்கும் ஆற்றல் பெறக் கூடாது. மனித உறவுகளை அன்புடைமைதான் நிர்ணயிக்க வேண்டும். சொத்துடைமையின் காரணமாக மனிதர்கள் உறவுகளை முறித்துக் கொண்டு கலகம் செய்வது அறியலாம். அதே போழ்து நியாயங்களையும் தேவைகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் சொத்துக்களை ஆக்கிரமிப்பது அல்லது உரிமைப்படுத்திக் கொள்ள முயற்சி செய்வது வரவேற்கத் தக்கதல்ல. அதுமட்டுமல்ல கண்டிக்கத் தக்கதும் கூட. சொத்தினை பயன்பாட்டு நெறி வழியில்தான் சொத்துடைமை என நியாயமாகக் கொள்ளலாம். பலருக்கும் பயன்படாத சொத்துரிமை விரும்புவது அறநெறியாகாது. இன்றைய தேவையின் அடிப்படையில் அணுக வேண்டும்.