பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

35


வருவாய் பெற முடியாது. ஆதலால் ஜப்பான் தேசத்தைப் போல, கிராமத்தின் ஒவ்வொரு வீடும் தொழிலகங்களாக வளர்ந்து காட்சியளிக்க வேண்டும். மேலும், வேளாண்மைத் துறையிலும் புதிய வழிதுறைகளைக் கையாண்டு திருந்திய முறையில் சாகுபடி செய்து, உயர்ந்த அளவு விளைச்சலைக் காணத் தூண்ட வேண்டும். கிராமத்தின் தேவைகள் அனைத்தையும் அந்தக் கிராமமே உற்பத்தி செய்யும் அளவிற்குக் கிராமம் வளர்ச்சியுடைய வேண்டும். தன்னிறைவு இல்லாத கிராமத்தின் செல்வம் நகர்வாழ் மக்களால் சூறையாடப்படும். ஆதலால், ஊராட்சி மன்றங்கள் தமது கிராமத்திற் கேற்றவாறு திட்டங்களைக் கண்டு செயல்படுத்தி அதைத் தன்னிறைவு உள்ள கிராமமாக்குதல் வேண்டும்.

கிராமத்தில் தேங்கிக் கிடக்கும் மனித சக்தியை வெளிப்படுத்திச் செயல்படுத்தும் ஆற்றல் கூட்டுறவு இயக்கத்திற்கு உண்டு. சுதந்திர பாரத சமுதாயக் குடும்பத்தின் இலட்சியம் சோஷலிச சமுதாய அமைப்பு. அந்த இலட்சியத்தை அடைய நம்முடைய இரண்டு நேர்ப்பாட்டைகள் கிராம ராஜ்யமாகிய பஞ்சாயத்தும் கூட்டுறவுமாகும். பிரிந்து கிடக்கும் மனித சக்திகளைக் கூட்டுறவு இயக்கத்தின் மூலம் ஒன்றுபடுத்த முடியும். கூட்டுறவால் நாட்டுயர்வு ஏற்படும். ஆதலால் கிராமத்தின் எல்லா முயற்சிகளையும் வேளாண்மை முதல் வாணிபம் வரை கூட்டுறவு முறையிலே செய்ய முயற்சிப்பது நல்லது. கூட்டுறவின் மூலமே சுரண்டுபவன், சுரண்டப்படுபவன் என்ற இரண்டு சாதிகளை ஒழிக்க முடியும். அதுமட்டுமல்ல-எதிலும் எப்படியாவது இலாபம் எடுத்ததாக வேண்டும் என்ற வடிகட்டிய பிற்போக்குணர்விலிருந்து சமுதாயத்தைப் பேணிக் காப்பாற்றவும் முடியும். கூட்டுறவின் மூலம் “நமக்காக எல்லோரும்; எல்லோருக்குமாக நாம்” என்ற உயர்ந்த வாழ்க்கை முறை உருவாகும்-உறவுகலந்த பந்தபாசம் பல்வேறு குடும்பங்களுக்குள் ஊடுருவி வளரும்.