பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

495


செய்கின்றன. மற்றவர்களை நோக்க நாம் தாழ்ந்தவர்களாக இருக்கிறோமே என்ற கவலை அவர்களை வாட்டுகிறது. உயிர்களின் பிறப்புரிமை சுயமரியாதை உணர்ச்சி. அந்தச் சுயமரியாதை உணர்ச்சிக்கு ஊறு ஏற்படும் பொழுதெல்லாம் மன முறிவுகளும் ஏற்படுகின்றன. அதனால், மற்றவர்களோடு இணங்கி வாழ முடியாமையால் மனித சமூகத்திலிருந்து ஒதுங்கிவிடுகிறான். முரண்பாடு – இணக்கமின்மை முதலியவைகளினால் ஏற்படுகிற முடிவு (Tension) துடிப்பாகும். இந்தத் துடிப்பின் வேகத்தை உணர்ந்து குறைக்கத் தவறி அலட்சியமாக முரண்பாடு ஏற்படவில்லை என்று நினைத்து வாழ்ந்தால் முரண்பாடு மேலும் வளர்ந்து மனக்கோளாறுகளை உண்டாக்கி விடுகின்றன.


மனிதனின் மனம், விருப்பங்களின் ஊற்றுக்களன், காணாதவற்றையெல்லாம் காணவும், கேளாதவற்றையெல்லாம் கேட்கவும், துய்த்தறியாதனவற்றையெல்லாம் துய்க்கவும் நாடி அலைவது மனத்தின் இயற்கை. இங்ஙனம், எழும் விருப்பங்களை – அறிவினால் ஆராய்ந்து தகுதியில்லாத விருப்பங்களை – அவன் தன் மனத்தினின்று அகற்றிவிட வேண்டும். இது சால்பு நிறைந்த ஒழுக்கத்திற்கு அளவுகோல், இத்துறையில் வெற்றி காண்பது எளிதன்று. ஒருவனின் தகுதியுடைய விருப்பங்களையேகூட அவன் அடைந்து அனுபவிக்க முடியாமல் சமுதாயம், பழக்கம், வழக்கம், சட்டம் என்ற பேரால் தடை செய்கிறது. மண்ணிற்போட்ட வித்து முளைக்கத் தவறினாலும் தவறலாம். மனத்திலேற்பட்ட விருப்பமென்றவித்து, முளைத்தற்குத் தவறாது. நியாயமான தகுதியான மனிதனின் விருப்பத்திற்கு சமூகம் தடை செய்யும் பொழுது மனக்கோளாறுகள் தோன்றுகின்றன. தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளத் தடையாக இருக்கும் சமூகத்தை அவன் கடுங்கோபத்துடன் பார்க்கிறான். இதன் காரணமாக சமூகத்திற்கும் அவனுக்கும் மனமுறிவு ஏற்பட்டு கொலைகளும், தற்கொலைகளும் பெருகுகின்றன.நிறை