பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/558

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

542

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஞாயிற்றின் வலம் வரும் சுற்றுக்களே காலக் கணக்கீடு! இந்தக் கணக்கீடு இந்த உலகத்தில் - இந்த உலகத்தில் வாழும் மனித குலத்தின் வாழ்நாளை - வரலாற்றைக் கணிக்கிறது; நிர்ணயிக்கிறது. ஒரு மனிதன் வளர்ந்து வாழ்தலுக்குரிய களம் காலமேயாம்! அப்பரடிகள் காலத்தை உடைமையாக்கினார். காலம் களவு போகிறது என்கின்றனர். நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களில் பலர் காலத்தின் அருமை தெரியாமல் வறுமொழிகள் பேசியும் அம்பளந்தும் அரட்டைக் கச்சேரிகள் செய்தும் காலத்தைக் கழிக்கின்றனர். அவர்கள் என்ன செய்யலாம் என்று யோசிப்பதிலேயே காலத்தைக் கழிக்கின்றனர்; தேடிச் சோறு தினம் தின்கின்றனர். பழங்கதைகள் பேசுகின்றனர். இவைமட்டுமா? நல்லவர்கள் உழைத்து வாழ்பவர்களின் காலத்தையும் களவாடிச் சென்று விடுகின்றனர். நமது ஒரு நாள் வாழ்க்கையில் களவு போன காலம்தான் மிகுதி. நாமும் சமூகத்தில் வாழ்வதால் இந்த அடாவடித்தனமான காலக் களவுக்கு இரையாக நேரிடுகிறது. இதனால் உலகமாந்தர் வாழ்க்கை மனநிறைவு உடையதாக இல்லை; மகிழ்ச்சி நிரம்பியதாக அமைய இல்லை. அருவருக்கத்தக்க நிர்வாணமான சுயநலம்! பொருட் பேராசை பகற் கொள்ளை போல நடைபெறும் இலஞ்ச லாவண்யங்கள் இன்று சமுதாயத்தின் அங்கீகாரம் பெற்று விட்டன! அருவருக்கத்தக்க போட்டிகள்! இவைகளால் சமுதாயம் சீரழிந்து கொண்டு வருகிறது.

இந்தியா ஒரு வளமான நாடு, ஆனால், இந்தியாவில் ஏழைகள்! ஏன்? “பொருட் செல்வம் போற்றுவார்கள் உண்டு” என்றது திருக்குறள். இன்று பொருட் செல்வத்தைப் போற்றுவார் யார்? வசதிபடைத்த செல்வர்கள் மட்டும்தான் போற்றுகிறார்கள்! ஏழைகள் செல்வத்தின் மதிப்பையே உணர்வதில்லை! “உள்ளவர்களுக்கு மேலும் தரப்படும்; இல்லாதவர்களிடத்திலிருந்து உள்ளதும் எடுக்கப்படும்” என்ற விவிலிய வாக்கு நமது ஏழைகளுக்குப் பொருந்தும், இவர்