பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/584

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

568

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பெருமையும் புகழும் பெற்ற சிவநெறி இன்னமும் தமிழுக்கு உரிய இடத்தைக் கொடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் குறிப்பிடத்தான் வேண்டி இருக்கிறது. ஏழாம் நூற்றாண்டின் சைவ உலகைச் சூழ்ந்த காரிருளை திருஞானசம்பந்தர் அப்பர் என்ற ஞாயிறுகள் தமிழின் தண்ணொளியின் மூலமே மீட்டுக் காப்பாற்றினர் என்பதைச் சைவ உலகம் மறந்து சமரசம் என்ற போர்வையில் பிற மொழிக்கும் பிறமொழி மரபுகளுக்கும் தகுதி வாய்ந்த இடத்தைக் கொடுப்பது நெறியும் அன்று முறையும் அன்று - சமரசம் என்பது ஒன்று தம்முடைய இடத்தை இழந்து இன்னொன்றிற்கு இடத்தைக் கொடுப்பதன்று - அன்றியும் ஒன்றோடொன்று கலப்பதும் அன்று - ஒன்றில் விருப்பம் உடையவர் தன்னுடைய விருப்பத்தின் காரணமாகப் பிரிதொன்றின் மீது வெறுப்புக் கொள்ளாது ஒழுகுதலே சமரசப் பாங்காகும். ஆனால் இன்று நடப்பதோ தமிழுக்கும் தமிழ் மரபுக்கும் உரிய இடத்தைப் பிறிதொரு மொழியும் பிறிதொரு மரபும் எடுத்துக் கொள்ளத் திட்டமிட்டு முனைகிறது பிறிதொரு வகையில் கலப்படமும் செய்கிறார்கள் தனித்தன்மை இழக்காத போது ஒழுக்கம் தான் சிறப்புடையது. தனித்தன்மை இழந்த போது ஒழுக்கம் காலப்போக்கில் வெற்றுச் சூனியத்துக்கு அழைத்துக் கொண்டு போய் விடும். ஆதலால் தமிழர்கள் தம்முடைய மொழித் துறையிலும் சரி, சமயத்துறையிலும் சரி, சமுதாயத் துறையிலும் சரி, வழிவழி வளர்த்து வந்துள்ள தனித் தன்மையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அநபாய சோழனுக்குப் பிறகு: தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள், மற்றும் குறுநில மன்னர்கள், தமிழைப் போற்றி வளர்த்தவர்கள். தமிழின் பயனாகிய சிவநெறியையும் போற்றி வளர்த்தவர்கள். சைவசீலத்தில் நின்றொழுகிய அரசர்கள் பலர் உண்டு. பிறமொழி நாகரிகத்திற்குப் பகையாகத் தமிழ் இனநாகரிகத்திற்கு அரணாகத் தோன்றிய மூவர் தேவாரத்தை மூடி மூலையில் இட்டனர். அதனைக் கண்டு