பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/587

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

571


கிடக்கின்றன. ஆயினும் பொதியத்திற் பிறந்து வளர்ந்த மொழியின் அறிஞர்களாக விளங்கும் நீங்கள் மலைக்க மாட்டீர்கள், சைவத்தில் தெளிவு, தமிழில் தூய்மை, சைவத் தமிழ்ப் பண்பு வாழ்க்கை காணுதல் முதலியன இச்சங்கத்தின் முன்னே உள்ள கடமைகள் ஆகும். நிலை பெற்ற தமிழ் உலகத்தில் கால்பாவி நின்றும், வளர்ந்து வரும் புது உலகத்தோடு அறிவால் தொடர்பு கொண்டும், சிவ நெறியையும் செந்தமிழையும் வளர்க்க வழி காட்டுங்கள். தமிழர்களுக்கு எது தமிழ் நெறி, எது தமிழ் மரபு. எது சிவ நெறி என்பதை இனம் கண்டு காட்டி வழி நடத்தும்படி கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் சைவத் தமிழ் வரலாற்றில் ஒரு புது வரலாற்றைத் தோற்றுவிக்கின்றீர்கள். நீங்கள் நெஞ்சார நினைந்து செய்ய இருக்கும் தொண்டு - இருபதாம் நூற்றாண்டில் சைவத்திற்கும் தமிழுக்கும் அரண் செய்வதாக விளங்கும் என்று கூறி நம்முடைய இனிய எளிய அழைப்பை ஏற்று இன்னல்களைப் பொருட்படுத்தாமல் திருப்புத்துர்த் தமிழ்ச் சங்கத்தில் பங்குபெற வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் மீண்டும் இனிய வரவேற்பைக் கூறுகின்றோம். இனி திருப்புத்தூர்த் தமிழ்ச் சங்கம் நீங்கள் வசிக்கும் அறை. குன்றக்குடி திருவண்ணாமலை ஆதினம் உங்கள் வீடு, என்ற உணர்வுடன் பழகி, கொண்டும் கொடுத்தும் பணி செய்யும்படி கேட்டுக் கொள்கின்றோம். சென்ற காலத்தின் பழுதிலாத் திறனும், இனி எதிர்காலத்தின் சிறப்பையும் நினைந்து வரவேற்புரையை முடிக்கின்றோம்.

தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி
நாட்டான் தாள் வாழ்க