பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்த்தும் இரங்களும்

161


30. பக்கீர் முகம்மது!

காவிரி யாறு வளம்கொ ழித்திடும்
குடந்தையில் வளம்பல பெற்று வளர்ந்தோன்!
"மயிலாடு துறையின் நாடாளு மன்றத்
தொகுதி என்றும் இவன்றன் தொகுதியே”
என்றுரைத் திடுவர்! இத்தொகு தியிலே
தொடர்ந்து தேர்தலில் வெற்றியே பெற்று,
"தோன்றிற் புகழொடு தோன்றுக!” என்ற
வள்ளுவத் திற்கோர் எடுத்துக் காட்டாய்
வாழ்ந்த செம்மல், பக்கீர் முகம்மது!
"புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள
இரவன் மாக்களிற் பணிமொழி பயிற்றி"ப்
பலர்நெஞ் சங்களில் குடிகொண் டாயே
நீ ஒரு முஸ்லிம்! ஆம்முஸ் லீமே!
ஆயினும் நின்னிடம் விளங்கித் தோன்றியது
இந்தியப் பண்பா டேயாம்! அன்று
சீறாப் புராணம் செய்த உமறுப்
புலவர்க்கு வாய்த்த புகழ்த்தமிழ் வள்ளல்
சீதக் காதிபோல் செம்மல், நீ நமக்கு
வாய்த்த வள்ளலு மாயினை! இன்று நீ
எமைத் தனி யேவிட் டேகினாய் சுவர்க்கம்!
இனியார் துணைநம் தொண்டுகள் சிறக்க!
பீடுசால் பக்கீர் முகம்மது வே! சொல்!
அளவற்ற அருளா ளன்.அருட் பெருக்கில்
நனைந்து வாழ்க! நண்ப!
இன்ப அன்பில் திளைத்து வாழ்கவே!