பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

189


24. இறைவா! உன்னுடன் வருவேன்!

புத்தாண்டுச் சிந்தனை! பிரார்த்தனை!
ஒவ்வொரு நாளையும் என்னுடைய நாளாக்குவேன்!
ஒருநாளைக் கூட வீணாக்கமாட்டேன்!
முன்னே பார்ப்பேன்! பின்னோக்குதல் இல்லை!
இறைவா! கலகங்களிலிருந்து மீட்டு எடு!
இறைவா! பழிக்குப் பழிவாங்கும்
புத்தியிலிருந்து விடுதலை செய்க!
இறைவா! வேண்டாம் மனக் காழ்ப்பும் கசப்பும்!
காப்பாற்றுக!
இறைவா! எல்லாருக்கும் நட்பாக இருக்கும்
அருளைப் புரிவாயாக!
இறைவா! என் பகைவனுக்கும்
அன்பாயிருக்கும் பண்பை அருளிச் செய்க!
இறைவா! என்றும் பொறுத்தாற்றும் இயல்பினை அருள்க! இறைவா! பெருந்தன்மையை அருள்பாலித்திடுக!
இறைவா! எந்தத் தவற்றையும்
சடுதியில் உணரும் அறிவினைத் தருக!
இறைவா! தவறுகளை உணர்ந்த வேகத்திலேயே
திருத்தம் காண அருள் செய்க.
இறைவா! உதவும் இயல்பினை வழங்கியருள்க!
இறைவா! தீமையை வெறுக்கக் கற்றுக்கொடு!
இறைவா! தீமையிலிருந்து விலகி
நன்மையை நாடிச் செல்லும் புத்தியைக் கொடு!
இறைவா! மனிதனாக இருக்கும் வலிமையைக் கொடு!
இறைவா! வாழ்க்கைக்குரிய கூலியைத் தரும்
இயல்பு எது? காட்டுக!
இறைவா! வாழ்க்கைக் கணக்கைப் பார்ப்பது எப்போது?
இறைவா! குடிக் கூவியைத் தர உதவி செய்க!
இறைவா! நான் உன்னுடன் நடந்து வருவேன்
கடைசி வரையில் நடந்து வருவேன்!
அருள்பாலித்திடுக!