பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

290

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


119. தலையாய ஞானம்!

உன் உணர்ச்சி உன் கட்டுப்பாட்டில் இருக்கிறதா?
அல்லது உணர்ச்சி வெள்ளமாகக்
கரைபுரண்டு இயங்குகிறதா?
உணர்ச்சி - எல்லையிகந்த உணர்ச்சி
மனிதனை வீழ்த்தும்!
மனிதன் உணர்ச்சிகளைவிட உயர்ந்தவன்;
என்ற ஞானம் உணரப்படவேண்டும்!
மனிதன் உணர்ச்சிகளை வென்று
வாழ்க்கையை அறிவார்ந்த நெறியில் இயக்க வேண்டும்!
இந்நிலை மனிதர்க்கு வந்திடின்
மனிதன் வளர்வான்! நாளும் வளர்வான்!
அவன் உணர்ச்சிகள் வசப்பட்டு விட்டானா?
கீழ்மை நிலையை எய்துவான்! -
நீ தெரிந்துகொள்! நீ யார்?
உன் உணர்ச்சிகள் என்ன? என்ன?
"தம்மை உணர்தலே தலையாய ஞானம்”
என்றுரைத்த மெய்கண்டார் வாக்கு உணர்க!
தம்மை உணர்தல் தன்னைக் காணல்
உள்ளொளி பெருக்கும்;
உள்ளொளியில் பலமும் தெரியும் பலவீனமும் தெரியும்!
உன் வாழ்வுக்குக் கடினமுயற்சி தேவை!
நெருப்புச்சுட்ட புண் ஆறும்!
நெருப்புச் சுட்ட விரல்களைத் தடவிக் கொடுத்து
வறிதே காலம் கழிக்காதே!
தீயினைத் தெரிந்து கொள்: தீயை அணை !
உணர்ச்சிகளைத் தடுத்து நிறுத்து!
ஆறுகளையும் உணர்ச்சிகளையும் தடுத்து நிறுத்தி
வேகம் கெடுத்துப் பயன்படுத்த வேண்டும்!
உனது நம்பிக்கைகளைக் காக்க -
நம்பிக்கைகளும் நல்லெண்ணமும் உடையவனாய் இரு!
உனது நம்பிக்கைகள் உறுதியாகக்
கடினமாக உழைத்திடு!