பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

289


118. பழியும் பதிலும்!

ஓ, மனிதனே!
நல்ல வேட்டை நாய் தெள்ளுப்பூச்சிகளை
வேட்டையாடுவதில் காலங் கழிக்குமா ?
கழிக்காது! ஆனால்,
வளர்ந்த மனிதர்களும்
அற்பச் செயல்களில் காலத்தைக் கழிப்பர்!
ஓ, மனிதனே!
உன்னைப் பழிதுரற்றுகிறார்களா?
உன்னைப்பற்றி இல்லாதன, பொல்லாதன
பேசுகிறார்களா?
அவைகளுக்குப் பதில் சொல்ல முந்துகிறாயா?
வேண்டாம்! வேண்டாம்!
அர்த்தமற்ற பழிச் சொல்லுக்குப் பதில் சொல்வதென்றால் காலமெல்லாம் போய்விடும்!
உருப்படியாக எதையும் செய்ய இயலாது.
பழி துரற்றலுக்கு விடை எது?
கடமையைச் செய்து முடித்தலே பழிக்குப் பழி!
பழி தூற்றலுக்கு யாதொரு பதிலும் கூறாதே!
செயலே விடை!
உண்மைகள் உலகில் பரவ நீண்டநாள் பிடிக்கும்!
பொய் எளிதில் பரவும்; ஆனால், உண்மை உணரப்படும்! மதிப்பீடு பெற வாய்ப்புண்டு!
மதிப்பீட்டுலகம் வதந்திகளைப் புறத்தே தள்ளும்!
வதந்திகளைப் புறத்தே தள்ளு!
மனிதனுக்கு எதிராகப் பழிபல கூறினும்
மறைமுகமாகச் சொல்லப்பட்டாலும்
கோள்மூட்டினாலும்
சான்றோர் செவி பொருந்திக் கேளார்!
உண்மை பேசுவோர் நேர் நிற்பர்! நேர்மையாளர் நெறிமுறை பிறழ்தல் ஆகாது: ஆகாது!