பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

379


202. மனச்சாட்சி

"தன்னெஞ் சறிவது பொய்யற்க!” - என்பது திருக்குறள்;
மனிதனின் மனச்சாட்சியே அவனைப்பற்றித் தீர்ப்புக்
கூறுகிறது!
மனிதனின் நடத்தையைச் சாட்சியாகக் கொண்டு
ஆன்மாவின் மனச்சாட்சியே தீர்ப்புக் கூறுகிறது.
இந்த உலக நடைகளை, நியதிகளை நிர்ணயிப்பது
கடவுளின் திருச்சட்டங்களே!
ஆயினும்,
தீர்ப்பை எழுதுவது மனிதமனச் சாட்சியேயாம்
மனிதன் கடவுளின் சட்டஆட்சிக்கு - தீர்ப்புக்கு
முனைந்து முயன்று நின்றதில்
குற்றமற்றவன் என்று தீர்ப்பு!
ஆயினும் என்?
மனச்சாட்சி குற்றமற்றவன் என்று அறிய வேண்டும்!
மனச்சாட்சியின் தீர்ப்புக்குப் பின்தான்
மனிதன் விடுதலை பெறுகிறான்!
உயர்நீதி மன்றம் முதல் கடவுள் திருச்சபை ஈறாக
எதைத் தீர்ப்பாக எழுதினால் என்ன?
மனச்சாட்சி எழுதும் தீர்ப்பே தீர்ப்பு!
மனச்சாட்சியே மனிதனுக்கு விடுதலை அளிக்க இயலும்!
மனச்சாட்சியே! என்னை விடுதலை செய்!
இந்த நாளை உன்னுடைய நாளாகப்
பயன்படுத்துகிறாயா?
ஆன்மாவின் மனச்சாட்சியைக் கூர்ந்து நோக்கு!
விடுதலை பெறுக!