பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியரங்கக் கவிதைகள்

67


        போற்றற் குரியது! புண்ணிய வாய்ப்பிது!
        இராம நாத புரம்மா வட்டத்தில்
        மாத்தமிழ் வளர்ப்போம்! மன்பதை காப்போம்!
        ஆலை யும்தொழிற் சாலையும் அமைப்போம்!
        மதமாச் சரியங் களைக்களைந் திடுவோம்
        மதமாற் றம்எனும் சிறுபிள் ளைத்தனம்
        கூடா தென்று நாடெலாம் கூறுவோம்!
        எம்மத மும்சம் மதமாம் என்றே
        சமாஅ தான சகவாழ்வு வாழ்வோம்!
        உறவினை வளர்ப்போம்! அமைதியைக் காப்போம்!
        வளமார் வாழ்வை நிலமிசைச் சமைப்போம்!
        இவையே, நமது இனியகோட் பாடுகள்!
        அர்ப்பணிப்(பு) உணர்வுடன் அனைவரும் உழைப்போம்!
        இந்தப் பொங்கல் இனியநன் னாளில்
        நன்றுஇந் நோன்பினை நாமெலாம் ஏற்போம்!
        பானையிற் பொங்கல் மங்கையர் படைப்பர்!
        பைந்தமிழ்ப் பொங்கல் பாவலர் படைப்பர்!
        உடல்வளம் பெற்றிட உதவிடும் பொங்கல்!
        உணர்வு வளம்பெற உதவும்நற் கவிதை!
        எனநினைந் திங்கே கவியரங்(கு) அமைத்தனர்,
        சான்றோர்! அவர்க்குத் தமிழ்க்கவி புனைந்து
        இனிய பொங்கல் வாழ்த்தினைப் படைப்போம்!
        கவியரங் கேற இவண்வரு கவிஞர்காள்
        தருக, நுங் கவிதை! பொங்கல் சிறக்கவே.

புலவர் அ. மாயழகு - அறிமுகம்

பொங்கல் சிறக்கவே - அன்பினால்!


        உடம்பிலே உயிர் உளதா? இலதா?
        எனஅறிந் திடநன் மருத்துவர் கையின்
        நாடியை நாடிப் பிடித்துப்பார்த் திடுவர்