பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியரங்கக் கவிதைகள்

69


அறமே யாகும்! அந்த அறநெறி
செல்லமாய்ப் பேணத் தக்கது! அதனால்,
“அறத்தினால் பொங்கல் சிறக்கவே!” - கவிசொல
புலவர் செல்லம் வருகிறார்: பொழிகவே!

முடிப்பு:

செந்தமிழ்ச் செல்லம் செவியுறத் தந்த
அறநெறி போற்றுவோம்! அறத்தினால் வாழ்வோம்!

புலவர் அன்னைதாசன் - அறிமுகம்

“பொங்கல் சிறக்கவே - அருளினால்! ”


அறவிலை வாணிகம் பகருதல் தண்டமிழ்
வழக்கமு மன்று; பழக்கமு மன்று!
அருள்நலம் சிறப்பதே அறத்தின் ஆக்கமாம்!
அன்பெனும் தாய், ஈ னுவ(து) அருள் மகவு!
அறநெறி யெனும்பணி மனையிலே வளர்வது!
தாயெனப் பரிவுடன் கூடிய அழைப்பு
ஈன்ற தாய்க்குரிய அழைப்பு மட்டுமல்ல!
காதல் வாழ்க்கையில் கைகொடுத் துதவும்
கன்னியர் தவிர, மற்றைய மகளிர்
அனைவருக் கும்பொது வாகிய அழைப்பாம்!
ஆட வரும்நமை ஆளும்ஆண் டவனும்
அன்னைஎன் றேதான் அழைக்கப் பெறுகிறார்!
“தாய் ஒக்கும் அன்பில்” புலனெறி வழக்கு - இது!
அருள் எனும் அன்னையை அறிமுகப் படுத்த
அருமைக் கவிஞர் அன்னை தாசன்
வருகிறார் இங்கே! தருகிறார் கவிதை!
அன்னைதா சனுக்குத் தாசராய் இருந்து,
அவர்கவி கேட்போம்! ஆனந்தம் பெறுவோம்!