பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

155


'செய்யாதன செய்யோம்
தீக்குரளைச் சென்றோதோம்”

என்று ஆண்டாள் பேசுகிறார். எதைச் செய்யக் கூடாதோ அதைச் செய்யாதிருப்பது முதல் ஒழுக்கம். அதைச் செய்யாதிருக்கச் சில விதிகள் வேண்டுமே. பெரும்பாலும் செய்யத்தகாதன செய்வதற்கு ஊனின் பெருக்கமே முதற்காரணமாக உள்ளது. எனவே, அவ்வூனினைப் பெருக்காமல் இருக்க நோன்புக்காலத்திலாவது நெய், பால் முதலிய சத்துணவுகளை நீக்கவேண்டும் இதற்காகவே,

'நெய்யுண்ணோம் பாலுண்ணோம்' என்றனர்.

வைணவப் பரம்பரையில் வாழ்க்கை நெறியைப் பாடியவர் ஆண்டாள். சைவப்பரம்பரையில் இறை அன்பிலே ஊறித்திளைத்தவர் கண்ணப்பர். இறைவனே அழகு. அந்த அழகுக்கு அழகு செய்யச் சூடிக்கொடுத்தார் அந்தச் சுடர்க் கொடியாள். ஆண்டாளும், கண்ணப்பரும் அன்பு நெறி நின்றவர்கள். கடவுளை வாழ்வுப் பொருளாகக் கண்டவர்கள். ஆண்டாள் கண்ணனைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்பினார்.

மனிதனின் கண்ணுக்குப் பாவை இன்றியமையாதது. அது இருந்தால் தானே காட்சி. அதுபோல, திரு வெம்பாவையும், திருப்பாவையும் இருபாவைகள். அவற்றின் மூலம் நாம் ஞானக்காட்சியை அனுபவிக்கலாம். கடவுள் நம்பிக்கையில் சந்தேகம் இருப்பவர்கள் பாவையைப் படியுங்கள். அது உங்களை இன்ப அனுபவத்திற்கு இழுத்துச் செல்லும்.

திருவெம்பாவை திருப்பாவைப் பாடல்கள் மனித வாழ்க்கையை ஈடேற்றும். திருவாசகம், சிவானந்த அனுபவம் பொங்கி எழுந்தபோது வந்த பாடல்கள். குற்றால நீரருவி போல்-குற்றாலத்தருவியில் தண்மையை அனுபவிக்கின்றோம்; மாணிக்கவாசகர் தந்த திருவாசகத்தில் தண்ணார்