பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

167


பரவுகிறது. மனத்திற்கு மனமுண்டா என்பது சமீபகாலம்வரை ஐயப்பாடாகத்தான் இருந்தது. இப்போது கொலைகாரனை, திருடனைத் துப்பறியும் நாய் கண்டுபிடித்து விடுகிறது. இதிலிருந்து மனத்திற்கு மனம் உண்டு என்பதை நம்பத்தானே வேண்டும்.

"கயிலாயத்து உச்சியுள்ளான் காளத்தியான்
அவன் என் கண்ணுள்ளானே"

என்றார் மாணிக்கவாசகர்.

கண்ணுளான் என்பதை மறந்து விட்டோம். அவன் எங்கேயோ இருப்பதாக எண்ணுகிறோம். கடவுளை வாழ்த்துவதெல்லாம் நமக்காகத்தானேயன்றி கடவுளுக்காக அல்ல. காற்றைச் சுவாசிப்பது காற்றுக்காகவா? சோற்றைத் தின்பது சோற்றுக்காகவா? எனவே கடவுளை வாழ்த்துவதும் வழிபடுவதும் நமக்காகத்தானேயன்றி கடவுளுக்காக அல்ல.

வளர்ந்து வருகிற அறிவியல் உலகில் தலைசிறந்தவர்களாகக் கருதப்பெறுகிற விஞ்ஞானிகள் கூட கடவுள் நம்பிக்கையை மறுக்கவில்லை. இன்று கண் பாங்கிகள் உள்ளன. கண்தானம் செய்தவர்களின் கண்களை, பார்வையிழந்தவர்களின் இமைகளில் பொருத்தி மீண்டும் கண் ஒளி பெறச் செய்யலாம். ஆனால், பத்துபேரின் கை, கால் முதலிய அவயவங்களை வாங்கி ஒரு மனிதனை உருவாக்க முடியுமா? நாம் உண்ணுகின்ற உணவுதான் பல்வேறு மாறுதல்களுக்கு உள்ளாகி இறுதியில் இரத்தமாகிறது. ஆனால், நாமே அந்த உணவுப் பொருள்கள் யாவற்றையும் ஒரு சேரக் கலந்து எத்தகைய இரசாயன மாறுதல்களாலும் ஒரு சொட்டு இரத்தத்தைப் பிரித்தெடுக்க முடியுமா? இப்படி நாம் தோல்வியுறும்போதுதான் அதனை உருவாக்கும் பேராற்றலை-இறைவனை நாம் உணர்கிறோம்.

அ, ஆ, முதலிய தமிழ் எழுத்துக்களைக் கொண்டு தான் திருக்குறள், கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம் முதலிய