பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

288

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முப்பாட்டன் ஆகியோர் வழங்கியன. நீங்கள் எனக்குப் புதிதாக என்ன செய்கிறீர்கள் என்று கேட்டால் நாம் என்ன பதில் கூறமுடியும்?

2. தமிழின் மேன்மை


தமிழ் என்று சொல்லுந்தோறும் நினையுந்தோறும் இன்பப் புது மது பெருக்கெடுத்து ஓடுகின்றது. ஆம். தமிழே இனிமை; இனிமையே தமிழ். தமிழே அழகு; அழகே தமிழ். "தமிழ் என்பது சிவம், இனிமை” என்றது பேரிசைச் சூத்திரம். சொல்லினும், கேட்கினும், சிந்தை நிறைக்கத் தோன்றும் இன்ப நல்லியல் நோக்கித் தமிழ் என்று அறைந்தனர் சொல்லறிஞர். அமிழ்தென்பதே தமிழாயிற்று என்பது சொல்லாராய்ச்சியாளர் முடிபு. "என்று முள இனிய தென் தமிழ்" என்று களிகூரப் பாடுகின்றார் கம்பர். தேன் தமிழ் என்பது தென் தமிழாயிருக்கவேண்டும் என்பதைத் தமிழ் இன்பம் நுகர்ந்தவர்கள் சொல்லுவார்கள். "தேனுறத் தமிழும்” என்றது கல்லாடம், "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவ தெங்குங் காணோம்" என்று பாரதியார் பாராட்டுகின்றார். "தேமதுரத் தமிழோசை” என்றும் கூறுகின்றார். "பாலொடு தேன் பழம் இவைகள் உண்ண இனித்திடுமால், ஏல நினைத்தாலும் இனிப்பாய் தமிழ்த் தாயே" என்றார் மற்றொரு புலவர். அழகுடை நங்கையைத் "தமிழ் தழீஇய சாயலவர்” என்று பேசுகின்றது சிந்தாமணி,

தமிழின் தொன்மை

தமிழின் தொன்மையைப் பற்றி என்ன சொல்லுவோம். உலகின் ஆதிமொழிகள் ஐந்தனுள் ஒன்றாக நமது அருமைத் தமிழ் விளங்குகின்றது. இன்று இவ்வுலகில் வழங்கும் மொழிகள் 7500 வரையுள. இம் மொழிகளெல்லாம் ஒர் அடி மரத்தினின்றும் கவர் விட்டுக் கிளைத்த கொம்பர்களை