பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

362

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கருதுகின்றனர். இவையே காரணமாயிருப்பின் இன்று மழைவளம் வற்றுவானேன்?

செயற்கை முறையில் மழை வரவழைக்கும் முயற்சியில் விஞ்ஞான உலகம் ஈடுபட்டுள்ளது. அவர்கள் வெற்றியும் காணக்கூடும். ஆனால் அவ் வெற்றி வையகம் முழுவதுக்கும் பயன் தருமா என்பதை எல்லோரும் சிந்திக்க வேண்டும். எங்கோ ஒரு பகுதியில் பெரும் பொருட் செலவில் இயற்கை மழை பெய்விக்க இயலும், ஆனால் செலவின்றி மாநிலம் முழுவதற்கும் பயன் தருகின்ற பெருமழையை விரும்புவோமானால், நமது பண்டைத் தமிழ்ப் பெருமக்கள் மழைக்குக் காரணம் என்று கருதிய அறவுணர்வுகளையும் சிந்தித்து வளர்க்க வேண்டும்.

மக்கள் அன்பின்றி - அறவுணர்வின்றி - அருளொழுக்கமின்றி - அல்லாதனவே செய்து வாழ்ந்தால் மழை பொழியாது என்று தமிழ்ச் சான்றோர்கள் கருதி நல்ல வண்ணமே வாழ்ந்தனர். மழை நீங்குதற்குக் காரணமான கொடுமையை உடைய ஊர் என்று பாலைக்கலி பகருகிறது. மங்கை நல்லாரின் கடவுட் கற்பு நிலையும் வான்மழை பொழிதற்குத் துணை செய்யும். "வான்தரு கற்பினுள்" என்று பாலைக் கலி பேசுகிறது. எனவே, மழைத்துளி பெருகி - மாநிலம் செழித்து - செல்வ வளம் கொழித்து - இன்ப நலம் பூத்திட - மகிழ்ச்சியிற் சிறந்து மக்களினம் வாழ விரும்புமானால் அன்பு பெருக வேண்டும். அறம் பல வளரவேண்டும், நல்லனவே எண்ணவும், பேசவும், செய்யவும் மக்கள் முயலவேண்டும். இதனை யாரும் மறுக்க முடியாது. இது சங்கத் தமிழர் அறிந்து போதித்த நீதியுமாகும்.

இன்று தமிழகம் வான் மழையின்றி வாடுகின்றது. பல்லோரை உண்பிக்கும் நெற்பயிர்கள் வாடுகின்றன. மக்கள், குடிக்கும் நீருக்குக் கூடப் பரிதவிக்கின்றனர். பசும் போர்வை போர்த்து அழகு பொலியத் தவழ்ந்த தமிழன்னையின் அழகு அழிந்துபட்டது. பொழிவதற்கே உரிய காலத்திலும் கூடப் பொய்த்துவிட்டது. புயல்,