பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

391


வராவிடில், வெறுப்பும், வெறியும் சமுதாயத்தில் வளரத்தொடங்கி, கலகங்களை விளைவித்து, கொலையைப் பெருக்க ஏதுவாகும். உலக வரலாற்றில் இத்தகு இரத்தக் கரை படிந்த நிகழ்ச்சிகள் பலவற்றைக் காண்கின்றோம். இன்றைக்கும் உலகம் முழுவதிலும் வாதப்பிரதிவாதத்தில் இருந்துவரும் முக்கியப் பிரச்னையும் இதுவேயாம். பலாத்காரத்தின் மூலம் பொருளாதார சமத்துவத்தைக் கொண்டுவர உலகின் வடதுருவத்தில் உள்ள நாடு திட்டமிட்டு, திட்டத்தைப் பரப்பி சாதனையாக்க உழைத்துக் கொண்டு வருகிறது. உலகின் மேற்கொடியில் உள்ள வளம்படைத்த நாடு அதைத் தடுக்க, போர் முதலிய பல துறைகளையும் மேற்கொண்டு சாதிக்கப்பாடுபடுகிறது. இந்த நிலையில், இந்தியா, நாட்டில் பொருளாதார சமத்துவம் கொண்டுவர மனித தருமத்தின் அடிப்படையில் அன்று நெறிப் புரட்சியாகக் காட்சி அளித்து, மக்கள் மனத்தை மாற்றி, சமத்துவத்தைக் கொண்டுவர முயல்கின்றது; ஓரளவு சாதித்தும் விட்டது என்றுகூடச் சொல்லலாம். காந்தியத்தின் வழி விளக்காம் வினோபாஜி அவர்களுடைய நிலக்கொடை இயக்கம் அருளியலின் விளைவு - உண்மையிலேயே நிரந்தரமான சமத்துவத்தை நிலைநிறுத்துவது. பாரத கண்டத்தின் பண்பின்வழி அரசியல் விடுதலை பெற்றோம். இன்று பொருளியல் விடுதலைக்கு முயன்று கொண்டிருக்கின்றோம்.

வாழ்க்கையில் இன்பம்

வாழ்க்கை பெரும்பகுதி சுவையற்றதாக துன்பச் சுழலில் சுழல்கிறது. “உண்டி முதற்றே உலகு" என்பது பழமொழி. மனித வாழ்வுக்கு முதல் தேவை உணவும் உடையும். இவற்றிற்குப் பின்பு தான் மற்றவற்றைப் பற்றி மக்கள் சமுதாயத்திற்குக் கவலை. உயிர் வாழ வயிற்றுக்கு உணவும், குளிருக்கு உடலைக் காத்துக் கொள்ள ஓர் ஆடையும் கிடைத்துவிட்டால் அதுவே இன்பமென நினைப்