பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

73



நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்

நரகத்தில் இடர்ப்படோம் நடலையல்லோம்;

ஏமாப்போம் பிணியறியோம் பணிவோமல்லோம்

இன்பமே எந்நாளும் துன்பமில்லை;

நாமார்க்கும் குடியல்லாத் தன்மை யான

சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்

கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்

கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகினோமே!

என்னும் நெறிபற்றி நிற்கவேண்டிய தமிழ்மக்கள் நிலை இரங்கத்தக்கதாயிற்று. இனிவரும் காலத்தில் சமுதாயத் தீமைகளை அறியாமையை வேற்றுமைகளை, வறுமையை, ஏழ்மையைத் தாங்கிக் கொண்டிருக்காமல் அவற்றை எதிர்த்துப் போராடும் போர்க்குணம் உடையவர்களைப் பல்கலைக் கழகங்கள் நாட்டுக்கு வழங்குதல் வேண்டும். வாழ்க்கைக்குப் போர்க்குணம் இன்றியமையாதது. தமிழர்க்கு உலகில் வேறு எந்த இனங்களையும் விடப் போர்க்குணம் மிகுதி! நமது சங்க காலமே போர்க்காலம் தானே! உடன் பங்காளிப் போராட்டமாகப் போனதுதான் அவலமாயிற்று! மாந்தருக்குள் சண்டை நடந்தது போதும்! இனி சமூகத் தீமைகளை எதிர்த்துப் போராடி, சமுதாயத்திற்குச் சமவாய்ப்பு - சமநிலை உருவம் கொடுப்போமாக!

தாய் மொழியிலேயே சிந்தனை இயங்கும்

கல்வியில் வளர, சிந்தனைப் பயிற்சி தேவை. சிந்தனையே மனிதனுக்கு நுண்மாண் நுழைபுலத்தினை வழங்கும். சிந்தனை எளிதில் புலனாகா உண்மைகளைக் காணத் துணை செய்யும். சிந்தனை சார்ந்த கல்விதான் அறிவாக ஆக்கம் தருகிறது; சிந்தனை அறிவை விரிவாக்கும். சிந்தனைத் திறன், பிறந்த நாள் தொட்டுப்பேசிப் பயிலும் தாய் மொழியிலேயே இயங்கும். தாய்மொழி வழிச்சிந்தனைக்கு எந்த ஒன்றையும் விரைவில் ஆய்வு செய்து