பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

85


சமஸ்கிருதம் வளர்ந்து வந்தது. அந்தச் சூழ்நிலையில் தமிழர் சமஸ்கிருதம் படிக்கத் தடை விதிக்கப்பட்டது. இந்தி, இந்தி பிரசார சபைகளில் படிக்கப்பெற்றது. ஆனால் எல்லாரும் இந்தியைப் படிக்க வாயில் திறந்து விட்டபோது இந்தி எதிர்ப்பு இயக்கம் தோன்றியது. இது ஒரு சமூக ரீதியான பின்னடைவு என்பதை உணர்தல் வேண்டும்.

திட்டமிட்டுச் செயல்படவேண்டும்

தமிழ் பயிற்று மொழியாவதற்கு நன்றாகச் சிந்தித்துத் திட்டமிடுதல் வேண்டும். தமிழ்ப் பல்கலைக் கழகம் இந்தப் பணியைச் செய்யலாம். இப்போதும் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் அறிவியல்புலம் என்று ஒன்று அமைந்து சில பணிகளைச் செய்து வருகிறது. ஆயினும் இதுபோதாது. இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் உள்ள அறிவியல் ஆய்வுக் கழகங்கள் அவ்வப்பொழுது ஆய்வு செய்து, கண்டுபிடித்து, வளரும் புதிய அறிவியல் சார்ந்த தொழில் நுட்பங்களைத் தமிழில் வெளிவரச் செய்யவேண்டும். அதுபோலவே, உலக நாடுகளில் வெளிவரும் அறிவியல், தொழில் நுட்ப நூல்களைத் தமிழாக்கம் செய்து அச்சிட்டுத் தமிழ் நாட்டு மக்களுக்கு வழங்கவேண்டும். சாதாரண மக்களும் பங்கேற்கக் கூடிய அறிவியல் தொழில் நுட்பக் கருத்தரங்குகளை நடத்த வேண்டும். பாவேந்தன் பாரதிதாசன்;


“உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூல்கள்
ஒருத்தர்தயை இல்லாமல் ஊரறியும் தமிழில்
சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்”


என்று கூறியாங்கு நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ் நாட்டின் சிற்றூர்களில் எல்லாம் அறிவியல், தொழில்நுட்பச் செய்திகள் சாதாரண மக்களால் பேசப்படும் செய்தியாக இடம் பெறவேண்டும்.