உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1


சங்ககாலத்தில் தனிப் பாடல்கள் தொகைபெற்றது போல இருபதாம் நூற்றாண்டு தொகைநூற் காலம் எனத் திறனாய்வாளர் மதிப்பீடு செய்துள்ளனர். எழுத்தாளரின் கதைகள், அறிஞரின் கட்டுரைகள், ஆய்வுகள், படைப்புகள் ஒரு குடைக்கீழ் தொகைப் படுத்தும் முயற்சி இந்த 20 ஆண்டுகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அடிகளாரின் நூற்றொகை 20ஆம் நூற்றாண்டுத் தொகைநூல் வரலாற்றில் வரலாறு படைத்து விட்டது. 6000 பக்கங்களையும் ஒருசேரத் தொகுத்துப் பார்க்கும்போது பிரமிப்பு உண்டாகிறது. நாளும் சொற்பொழிவு, திருமடத்துப் பணிகள், பல்வேறு அமைப்புகளை உருவாக்குதல், பன்னாட்டுப் பயணம், பன்னாட்டு உறவு, பல்வேறு செயற்பாடுகள் இவற்றுக்கிடையே குன்றக்குடி அடிகளார் செய்த நூற்பணி மலைப்பைத் தருகிறது. கட்டுரைகள் பொழுதுபோக்குக் கட்டுரைகள் அல்ல. புதிய தமிழகம் தோன்ற, தமிழர்கள் விழிப்புணர்ச்சி பெற வழிவகுக்கும் படைக்கலன்கள். தமிழ் மறுமலர்ச்சி, சமய மறுமலர்ச்சி, சைவ சமய எழுச்சி. திருமுறை இயக்கம், திருக்குறள் இயக்கம். தமிழ் வழிபாடு முதலியவற்றுக்கு அடிகளார் அளித்த கருத்துக் கொடைகள் இத்தொகுதிகளில் பதிவு செய்யப் பெற்றுள்ளன.

குன்றக்குடி அடிகளாரிடம் மறைமலையடிகளின் சைவநூற் புலமையும் திரு.வி.க.வின் சமயப் பொதுமையும் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனாரின் தமிழ்ப்பற்றும் ஒருங்கிணைந் திருப்பதைத் திறனாய்வாளர்கள் இனங்கண்டு அடையாளங் காட்டியுள்ளனர்.

கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இளங்கோ அடிகள் சிலப்பதிகாரம் என்றொரு மணியாரம் படைத்துச் செந்தமிழுக்குச் செழுமை சேர்த்தார் என்பர். 20ஆம் நூற்றாண்டில் ஈடு இணையற்ற எழுத்துப் பணியால், கருத்துப் புரட்சியால் குன்றக்குடி அடிகளார் குன்றாப் புகழ் பெற்றுக் குன்றேறி நிற்கிறார்.

மேடைத் தமிழுக்கு அடிகளார் மேன்மை சேர்த்தார். மனித குலத்தை மேம்படுத்தும் எண்ணங்களை வாரி வழங்கினார். செந்தமிழ்ப் பொழிவுகளால் தமிழரின் சிந்தை மகிழச் செய்தார். அடிகளின் பாணி தனிப்பாணி. அடிகளார் வழியில் பட்டி மண்டபங்கள் இன்று வெற்றி நடைபோடுகின்றன. அடிகளாரின் பேச்சே எழுத்து வடிவமாக இருக்கும். எழுத்தில் மேடைப் பேச்சின் செல்வாக்கு மிகுந்திருக்கும். இதனை இந்நூல்வரிசை கற்பார் எளிதில் உணர்வர்.

நாவுக்கரசரின் தொண்டு நெறியும் மாணிக்கவாசகரின் அருள்நெறி ஈடுபாடும் சேக்கிழார் வழியில் தொண்டர் சீர்பரவும் இயல்பும் அடிகளார் வாழ்வில் இயல்பாக அமைந்தவை.

அடிகளாரின் திருக்குறள் ஈடுபாடும் திருக்குறள் கல்வியும், திருக்குறள் தேர்ச்சியும் சமூகப் பார்வையும் முதல் நான்கு தொகுதிகளில் பதிவு செய்யப் பெற்றுள்ளன. இவர்தரும் புதிய வெளிச்சங்கள் பல.

அடிகளின் நூலினை ஒரு சேரத் தொகுத்து நோக்கிடும்போது முனைவர் பட்டங்களுக்கு ஆய்வு செய்வதற்குக் களங்கள் -