பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கம்பன் அடிப் பொடி சா. கணேசன், ஈரோடு இருமொழிச் சொற்கொண்டல் எஸ். மீனாட்சி சுந்தர முதலியார், மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பணிசெய்த பன்மொழிப் புலவர் தெ.பொ.மீ. முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அப்போது மதுரையிலிருந்து 'தமிழ் நாடு' என்ற பெயரில் நாள் இதழ் ஒன்றினை கருமுத்து தியாகராசன் செட்டியார் நடத்தி வந்தார். இதன் ஆசிரியராக எம்.எஸ்.பி. சண்முகம் இருந்து வந்தார். தமிழ்நாடு நாளிதழ்தான் குன்றக்குடி ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சரிய சுவாமிகளை "குன்றக்குடி அடிகளார்” என்று தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. பின் குன்றக்குடி அடிகளார் என்ற பெயரே நிலைபெற்று விட்டது. அறிஞர் அண்ணா, 1967-ம் ஆண்டு காரைக்குடி திருக்குறள் கழக விழாவுக்கு வருகிறார்... அப்போது குன்றக்குடிக்கும் வரும்படி அறிஞர் அண்ணாவுக்கு எழுதினார் அடிகளார். அறிஞர் அண்ணாவும் காரைக்குடி திருக்குறள் விழாப் பேச்சை முடித்துக்கொண்டு குன்றக்குடிக்கு வந்தார். திருமடத்தின் மரபுப்படி வரவேற்பு கொடுக்கப்பட்டது! இரவு உணவு திருமடத்தில்! அன்று அறிஞர் அண்ணாவுடன் கூட வந்தவர்கள் கவியரசு கண்ணதாசன், பூவாளூர் பொன்னம்பலனார். உணவுக்குப் பின் தோட்டத்தில் நிலவொளியில் கலந்துரையாடல்! வழக்கம்போல் அறிஞர் அண்ணாவுக்கும் குன்றக்குடி அடிகளாருக்கும் இடையில் நட்புறவு கலந்த உரையாடல், பேச்சு மெள்ள அரசியல் பக்கம் திரும்பியது. குன்றக்குடி அடிகளார் காங்கிரஸ் கட்சிப் பற்றாளர்.... காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு திரட்டுகிறார். அறிஞர் அண்ணா காங்கிரஸுக்கு எதிர்ப்பாகக் கூட்டணி அமைத்துக் கொண்டு ராஜாஜி தலைமையில் போராடுகிறார்! காமராஜரை எதிர்ப்பதற்கும் ராஜாஜியை ஆதரிப்பதற்கும் நோக்கம் என்ன? இது அடிகளாரின் கேள்வி?