பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சட்டமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர் ஒருவர் இந்தி எதிர்ப்புப் போராடத்தைப் பற்றிப் பேசும்போது, "மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். காங்கிரஸ்காரராகிய அடிகளார். இந்தியை எதிர்த்து ஊர்வலம் நடத்தியுள்ளார்” என்று பேசினார். அப்போது முதல்வர் பக்தவச்சலம், "அடிகளார் எங்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் அல்ல. அடிகளார் காங்கிரஸ் வேறு" என்று பதில் கூறினார்.

வழக்கு நடந்தது! இடையில் ஆர்.வி. சாமிநாதன் முதலமைச்சருக்கும் நமக்கும் சந்திப்பை உண்டாக்கி, சமாதானம் செய்யும் முயற்சி எடுத்தார். இராமநாதபுரம் மாவட்ட அரசியலில் ஆர்.வி. சாமிநாதன் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருந்தார். இன்னும் அவருடைய மகள் டாக்டர் இந்திரா இராமநாதன், பேரர் டாக்டர் நற்குணம் ஆகியோர் அரசியலில் ஈடுபாடு காட்டுகின்றனர். ஆனால் தீவிரமில்லை. இன்றைய தமிழ்நாட்டு அரசியலில் பாகனேரியின் பங்கு குறைந்துவிட்டது. ஆர்.வி. சாமிநாதனிடம் நமக்கு மதிப்பு உணர்வு இருந்தது. ஆர்.வி. சாமிநாதனின் முயற்சியால், முதல்வர் பக்தவத்சலத்துடன் நமது சந்திப்பு நிகழ்ந்தது. நடந்தவற்றை விளக்கினோம். முதல்வர் பக்தவத்சலம் மிகவும் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார். பெரியவர் பக்தவத்சலத்துக்கு உண்மைகள் புலனாயின, மிகவும் வருந்தினார். அதேபோழ்து அவருடைய பங்கு மிகமிகக் குறைவு என்று அறிந்துணர முடிந்தது. வழக்குத் தொடுக்கக் காரணமாக இருந்தவர் பிரான் மலையில் பாடம் பெற்ற அமைச்சர்தான் என்று உய்த்துணர முடிந்தது.

ஒருவாறு இந்தி எதிர்ப்பு வழக்கு முடிந்தது. வழக்கை அரசு மிகவும் கண்டிப்புடன் பெரிய வழக்கறிஞரை வைத்து நடத்தியது. வழக்கின் முடிவு ஆள்வோர் எண்ணப்படி நமக்குப் பிரதிகூலம்! 350 ரூபாய் அபராதம் விதிக்கப்பெற்றது.