பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

223


மரகதம் சந்திரசேகர் லண்டனில் படித்தவர். ஆயினும் பாரதப் பண்பாட்டைப் போற்றி வளர்த்தவர் வளர்த்து வருபவர். அமரர் நேரு குடும்பத்துடன் நல்ல உற உடையவர். நம் மீது பரிவு மிகவும் உடையவர்.

1960-ம் ஆண்டில் நாம் மத்திய சமூக நலக்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பெற்றோம்.ஆறு ஆண்டுகள் இந்தப் பொறுப்பில் இருந்து பணி செய்ய நேர்ந்தது. இந்தப் பொறுப்புக் காலத்தில் தமிழ்நாட்டளவில் ஆதிதிராவிடர்கள் மேம்பாடு குறித்துப் பயணங்கள் மேற்கொள்ளும் இனிய வாய்ப்புக் கிடைத்தது. சமூக நலக் குழுவில் இருந்தபோது நம்முடைய சமூகச் சிந்தனை ஒன்று வெற்றி பெற்றது. அது என்ன? மீண்டும் ஜாதிச் சிக்கல்தான்! ஆதிதிராவிடர் மாணவர் இல்லங்களில் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களை மட்டுமே சேர்த்தார்கள். இப்படி மாணவர்களைப் பிரித்து வளர்த்தால் - என்று தீண்டாமை போவது? தீண்டாமை என்பது ஆதிதிராவிடர்களிடம் இல்லையே! மற்ற ஜாதியாரிடம் உள்ள மனப்பான்மைதானே தீண்டாமை. இவர்கள் தீண்டாமையிலிருந்து விலகினால் தானே தீண்டாமை அகலும், நீங்கும். அன்றும் - இன்றும் இந்த முயற்சி மிகவும் குறைவு. ஆதலால், ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் நூற்றுக்குப் பத்து மாணவர்கள், இதர ஜாதிப் பிரிவு மாணவர்களைச் சேர்க்கவேண்டும். கங்கையும் காவிரியும் கலப்பதற்கு நாளானாலும் ஜாதிகளைக் கலக்கும்படி செய்ய வேண்டும் என்ற கருத்தை அரசுக்குப் பரிந்துரை செய்தோம். அரசு ஏற்றுக்கொண்டது; இன்றும் நடைமுறையில் உள்ளது. நமது ஆதீன நிர்வாகத்தில் திருப்பத்தூர் மடத்தில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி ஒன்று நடந்தது. இந்த விடுதியிலும் இது நடைமுறைக்கு வந்தது. இந்த விடுதியில் தங்கிப் பயின்ற மாணவர் ஒருவர் வடவன்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர். ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்று இன்று இந்திய அரசின் உயர் அலுவலராகப்