பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் உவமை நயம்

245



படுத்துவது போல, மனித உலகுக்குச் சேவை செய்வதன் மூலமே மனித உலகை இயக்கும் இறைவனைத் திருப்திப் படுத்த முடியும்.

நீரும்-மனிதனும்

மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கித் தண்ணிர் பாய்வது போல ஆத்திரப்படுவதும், கோபங் கொள்வதும், பகைமை காட்டுவதும் மனித இயல்பு. எனினும், இயல்புக்கு மாறாக, பள்ளத்திலிருந்து மேட்டிற்குத் தண்ணிர் கொண்டு. செல்வது போல, மனித இயல்புக்கு மாறாக ஆத்திரப் படாமல், கோபங் கொள்ளாமல் பகைமை பாராட்டாமல் வாழ்வதுதான் வாழ்க்கைக்குச் சிறப்பு.

விரல்களும்-வேறுபாடுகளும்

ஒன்றை ஓங்கிக் குத்தி வீழ்த்த வேறுபட்ட அளவைகளும், தோற்றங்களும் உடைய ஐந்து விரல்களையும் ஒருசேர மடக்கி இணைப்பது போல, மலிந்து கிடக்கும் வேற்றுமைகளைக் களைந்தெறிந்து ஒருமைப்பாடு காண வேறுபட்ட கருத்துக்களும் கட்சிகளும் கொண்ட எல்லாரும் தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும்.

பச்சை மட்கலம்

மொழியினால் தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்க, முயற்சிப்பது, பச்சை மண்கலத்திலே தண்ணிர் ஊற்றி வைப்பது போன்றதுதான். பச்சை மண் கலத்தில் நீர் ஊற்றினால் மண்கலம் அழிவதோடு, அதில் ஊற்றிய நீரும் சிந்திப் பயனற்றுப் போகும். அப்படித்தான் மொழியால் தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்க முயன்றால் மொழியும் கெட்டுப்போகும்-ஒருமைப்பாடும் உருவாகாது.