பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

290

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பற்றித் திருவாசகம் காட்டும் உவமை இருகையானையை ஒத்திருந்தும் என் உள்ளக் கருவைக் கண்டிலேன் என்பது, மாணிக்கவாசகர் வாக்கு உவமை மிகமிக அழகானது.

யானை மிகப் பெரிய உடலையுடையது. ஆனாலும் இத்தகு பேருடலுக்குள் இருக்கும் உயிர் நிலையையோ உயிருக்கு உயிராக விளங்கும் இறைநிலையையோ தெரிந்து தெளியும் ஆற்றல் அதற்கில்லை. அது போலவே மனிதர்கள் அறிவாலும், வேறு பிறவற்றாலும், சிறந்த மனித உடம்பைப் பெற்றிருந்தும் தன்னைப் பற்றியே அறியாமல்-அறிந்து கொள்ள முயற்சிக்காமல் இருந்துவிடுகிறார்கள். சீரிய சமய வாழ்வின் தொடக்கம் தன்னை அறிதலிலும் உணர்தலிலுமே தொடங்குகிறது. அமைகிறது. இதனை மெய்கண்ட நூல் தம்மையுணர்ந்து தலைவனையுணர்ந்து என்றருளுமாற்றால் உணரலாம்.

அடுத்து, யானை நீண்ட கையையுடையது. தொலைவி லிருந்தும் உணவெடுக்கும். தும்பிக்கையாலும் உணவெடுக்கும் -வாயினாலும் வாங்கும். நிறையத் தின்னும். எனினும் பருத்த தன்னுடலையே பார்க்க முடியாத குறையுண்டு. அதேபோல மனிதன் உண்டுடுத்து வாழ்ந்தாலும் தன்னைப்பற்றியே அறிந்து கொள்ள முடியாத “அறியாமை நிலை” எண்ணி யிரங்கத் தக்கது.

யானை இவ்வளவு பருத்த உடலுடையதாக இருந்தும், மிக நீண்ட கையையுடையதாக இருந்தும் தன்னுடைய முதுகில் உட்கார்ந்து தன்னை இயக்கும் மாவுத்தனை அறிந்து கொள்ள முடியாமல் இருப்பது போலவே, மனிதன் கூர்த்த அறிவுடையவனாக இருந்தும், தன்னுள் இருந்து தன்னை இயக்கும் இறைவனை உணர முடியாத நிலையில் இருக் கின்றான்.

யானை மதம் பிடித்தபோது, பிற உயிர்களுக்குத் துன்பமும் தொல்லையும் விளைவித்து தன் போக்கில்