பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

325



அந்தக் குகையில் ஒரு சிலந்தி, வலைபின்னிக் கொண்டிருந்தது. அடிக்கடி சிலந்தியின் பின்னலில் நூலிழை அறுந்து போயிற்று. ஆனால், சிலந்தி விடவில்லை. மீண்டும் மீண்டும் தொடர்ந்து வலை பின்னும் முயற்சியில் வெற்றி கண்டது.

இதனைக் கவனித்த அரசன் ராபர்ட் புரூஸ், எழுச்சி பெற்றான். போருக்கு ஆயத்தமானான்; போரிட்டான்; வெற்றியும் பெற்றான். அதுபோல் தொடர்ச்சியாக நடைபெறும் உழைப்பு, வெற்றியை ஈட்டித் தரும்.

இன்று வேலை செய்யும் நேரத்தைவிட, ஓய்வு, இளைப்பாறுதல் - இந்த வகையில்தான் அதிக நேரம் செலவழிக்கப் பெறுகிறது. ஒரு கடமையைச் செய்து முடிக்கும்வரை இளைப்பாறுதல் என்ன வேண்டியிருக்கிறது?

இன்று அலுவலக இடைநேரம், விடுப்பு தாராளமாக்கப்பட்டிருக்கும் நிலை, இவ்வளவும் உழைப்புக்குப் பகை. பணிகளுக்கிடையில் இளைப்பாறுவது மிகவும் தவறு.

உழைப்பு, உடம்பை வலிமையுடையதாக்கும். உழைக்கும்போது வரும் இடையூறுகள் மனத்துக்கு வலிமை சேர்க்கும். அதனால் இடறினும் தளரினும் எனதுறு நோய் தொடரினும் உழைப்பினைத் தொடர்ந்து செய்தலுக்குரிய உறுதி தோன்றும்.

உழைப்பாளிகள் இழப்புக்கள், துன்பங்கள் இவைகளைப் பற்றிக்கூடக் கலங்கமாட்டார்கள். "வானம் துளங்கில் என்? மண் கம்பம் ஆகில் என்?” என்பது அவர்களுடைய நெஞ்சுறுதியுடன் கூடிய பாங்கு. இத்தகு மனப் பாங்கினைப் பெற்றவர்களே உலகில் மகத்தான காரியங்களைச் செய்திருக்கிறார்கள்.

சாதனை செய்தவர்களின் வரலாறுகள் உழைப்பின் அருமையை உணர்த்துகின்றன. "பெரிய மனிதர்கள் உச்ச நிலையை அடைந்தார்கள் என்றால், அவர்கள் திடீர் என்று தாவிக் குதிக்கவில்லை. மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும்