பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

335


வாழ்நிலையின் அடித்தளத்தை வலுப்படுத்தும் . வேர்கள் மரத்தை வலுப்படுத்துவது போல!

அறிவியலில் புத்தம் புதிய நூல்களைக் கற்கவேண்டும். அறிவியல், அனுபவம் வளர வளர வளரும் தன்மையுடையது. அறிவியல் முற்றாக உலகியலை, உடலியலைச் சார்ந்தது. இந்த அறிவியல் உலகந்தழிஇயது என்றுகூடக் கூறலாம்.

கலாச்சாரம், பண்பாடு முதலியன நாடுகள் தோறும் மாறும்! இவை தலைமுறை தலைமுறையாக வருவன. இப்படி வழி வழி கலாச்சாரம், பண்பாடு ஆகியன வளரும் புதிய சமுதாயத்திற்கு மாறுபடாது. சென்ற கால வரலாற்றில் மாறுபட்டதில்லை.

ஒரு பழமை, புதுமையை ஈன்றுதர மறுக்குமாயின் அந்தப் பழமையில் ஏதோ குறையிருப்பதாகத்தான் பொருள். ஒரே வழி பழமைவாதிகள் தங்களுடைய அறியாமையை மறைத்துக்கொள்ளப் புதிய சிந்தனையை, புதியவற்றை எதிர்ப்பார்கள்.

கிரேக்க ஞானி சாக்ரட்டீஸ், கலீலியோ, ஏசுபெருமான், அப்பரடிகள், வள்ளலார் ஆகியோர் வரலாறுகள் இதற்குச் சான்றாகும். ஆனாலும் அவர்கள் கண்ட புதுமைதான் வென்றது.

அறிவு வளரும்போதே, ஆன்மாவும் ஒருங்கிணைந்து வளர வேண்டும். ஆன்மாரை வளர்த்துப் பேணிக்காக்கும் அறிவே, அறிவு. ஆன்மாவுக்குத் தொடர்பில்லாத அறிவு, வளர்ச்சிக்குத் துணை செய்யாது; மாற்றங்களுக்கும் காரணமாக அமையாது.

சிந்தனையில் வளர்ச்சி, அறிவில் வளர்ச்சி, அறிவியலில் வளர்ச்சி, வாழ் நிலையில் வளர்ச்சி, சமூகத்தில் வளர்ச்சி இவையெல்லாம் ஒருங்கிணைந்த நிலையில் நிகழுமாயின் மாற்றங்கள் ஏற்படும்.