பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

352

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இறங்கச் செய்து, ஆரோக்கியமில்லாத போட்டியால் தேசத்தின் பொருளாதரத்தை அழிக்கின்றனர். தாமும் கைம்முதல் இழந்து அல்லற்படுகின்றனர். பொருளாதார ஆக்க முயற்சிகளில் புதிய புதிய யுக்திகள் தேவை; வழிமுறைகள் தேவை. இதைத்தான் திருவள்ளுவரும்,

"இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு"

என்று கூறுகின்றார். இயற்றல் என்பது பொருள் உற்பத்திக் குரிய புதிய புதிய வாயில்களைக் காணல், பொருள் தேடும் முயற்சிகளில் புதியன காண்போர் தோன்றாததற்குக் காரணம்-அல்லது அதில் கருத்து நாடாமைக்குக் காரணம் -அதில் வருவாய் வருமா என்ற ஐயம்! சோதனைகளை ஏற்கத் தயக்கம்!

ஒருவகைப் பொருள் முயற்சி வெற்றி பெற்றது நிரூபிக்கப்பட்டு விட்டால், அந்தத் தடத்திலேயே மக்கள் செல்ல விரும்புவர். இது நமது மரபு. எல்லாவற்றுக்கும் மேலாக உற்பத்தித் தொடர்பில்லாத வழிகளிலேயே, வட்டிக் கடை நடத்துதல், வியாபாரம் செய்தல், எவரிடமாவது எடுபிடி வேலைக்கு அமர்தல் போன்றவற்றிலேயே மக்களுக்கு ஆர்வம் இருக்கிறது.

ஆர்வமும், முயற்சியும் உடையோருக்குப் பொருளாதார முயற்சிகள் எளிதில் கைகூடும். இந்த வழியில் அல்லாது, பொதுத் தொழில்களில் சுரண்டல் முறை நிலவுமானால் அது கொள்ளை நோயைவிடக் கொடியது. இந்தப் போக்கு, காரணமின்றியே வறுமையை உருவாக்கும்; இத்தகைய வறுமையை எதிர்க்கவேண்டும்.

பணவயமான சமூகம் கெட்ட பழக்கங்களில் ஈடுபடும். அதனால் வறுமை உற்பத்தியாகும். இந்த வறுமையை எதிர்த்துப் போராட வேண்டும். எல்லோரும் ஓயாமல் போராட வேண்டும்.