பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

407


சக்தியும் உள்ள நாடு. ஆயினும், இந்தியர்கள் ஏழைகளாக இருக்கிறார்கள்.

ஏன்? உடைமை உடையவர்களிடத்தில் உழைப்பைக் காண்பது அரிது! உழைப்பவர்களிடத்தில் உடைமையைக் காண்பது இயலாது. இது நாட்டின் சமூக, பொருளாதார அமைப்பு.

நமது நாட்டில் சோஷலிசம் அல்லது சர்வோதயம் அல்லது பொதுவுடைமைச் சமுதாயம் காண இயலாது. "உடைமைக்கு ஊழே காரணம்” என்ற சித்தாந்தம் மக்களின் மூளையில் இடம்பெற்றுள்ளவரை, மக்கள் தங்களிடம் பொருளின்மை அல்லது உடைமையின்மை குறித்து வருந்த மாட்டார்கள்!

நமது நாட்டில் ஏழ்மை, வறுமை இன்று நேற்றுத் தோன்றியதல்ல, பன்னூறாண்டுகளுக்கு முன்பிருந்தே தலைமுறை தலைமுறையாக வறுமையும், ஏழ்மையும் தொடர்ந்து வருகின்றன. இதற்கு என்ன மாற்று? முதல் மாற்று கூட்டுடைமைச் சமுதாய அமைப்பு அல்லது கூட்டுறவுப் பொதுநலச் சமுதாய அமைப்பு.

கம்பன், "எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தலாம்” என்று ஒரு இலட்சியப் பொருளாதார சமுதாயத்தைக் காண்கிறான். "உடைமையைப் பொதுமை செய்!” என்றான் பாவேந்தன் பாரதிதாசன். நமது பொருளாதாரம் கடன் பொருளாதாரமாக அமையக் கூடாது; உற்பத்திப் பொருளாதாரமாகே இருக்க வேண்டும்.

தனியார் துறை கட்டுப்படுத்தப்படுதல் வேண்டும். பொதுத் துறையையும், கூட்டுச் சமுதாய அமைப்புப் பொருளாதாரத்தையும் பேணி வளர்க்க வேண்டும். துறைதோறும் தன்னிறைவு காணவேண்டும். மக்களுக்கு இலவசம், இனாம் தருவது கூடாது. தூறலால் பயிர் விளைந்துவிடாது.