பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

455



அழகான முறையில் வெளிவந்துள்ள இந்த நூல் "இன்னும் பெரிய நூல்கள் வரவேண்டும்" என்ற பெரும் பசியை உண்டாக்கினால் அது வியப்பாகாது. அந்தப் பசியையும் தணிக்க அடிகளார் முன்வரவேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

கல்யாண நகர்-மயிலை
8-12-55.

கி. வா. ஜகந்நாதன்


2. ஈழத்துச் சொற்பொழிவுகள்

1968-சனவரி

அணிந்துரை

சைவமும் தமிழும் தழைத்தினிதோங்கத் தொண்டாற்றி வருபவர் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனகர்த்தர் தவத்திரு தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள்.

"சமயம் என்பது பொழுது போக்குவதற்காகப் பேசுகின்ற வரட்டு வேதாந்தமல்ல. அது வாழ்க்கையை அறநெறியில் செம்மையுறச் செய்யும் சிறப்பு வாய்ந்தது” என உலகெலாம் உணர்த்தி வருபவர்கள் அடிகளார்.

தமிழ் நாட்டில் அடிகளார். பேசாத கழகமோ, சங்கமோ, மாநாடோ இல்லை எனலாம். மக்களுடன் ஒன்றிப் பழகித் துறவிக்கும் சமூகத்துக்குமிடையே இருந்துவரும் பெரு வெளியைச் சுருங்கச் செய்து வரும் பெருமை குன்றக்குடி அடிகளாருக்கே உரியது.

அருள் நெறித் திருக்கூட்டம் ஒன்றைத் தமிழகத்திலும் ஈழ நாட்டிலும் அமைத்து இளைஞர்களிடையே இறை