பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

456

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்


பக்தியை ஊட்டி, சைவமும் தமிழும் உய்யக் காலத்துக்கேற்ற தொண்டுகளில் சைவ உலகை ஈடுபடச் செய்து வருபவரும் அடிகளார் அவர்களே.

"ஞானிகளது கடமை, உலகத்தைத் துறப்பது அல்ல; உலகை அறிவதே அவரது கடமை” வள்ளுவரும் இதை ஆணித்தரமாகக் கூறியுள்ளார். "உலகத்தை வெறுக்கும் தன்மையல்ல; சிறந்த உலகை உருவாக்குவதே ஞானிகளின் கடமையாக அமைய வேண்டும்” என்பது அடிகளாரின் ஆசை.

மக்களுக்காகச் சேவை செய்வதற்காக மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பதையே நான் வேண்டுவேன்" என அடிகளார் மேடைகளில் கூறுவதுண்டு.

பழமையிற் காலூன்றிக் காலத்துக்கேற்ற முறையில் சைவத்தையும் தமிழையும் பேணி வளர்த்துவரும் அடிகளாரை 1953ஆம் ஆண்டு ஜூன் மாதம் யாழ்ப்பாணத்தில் வரவேற்கும் பணியில் பேரன்பர்களுடன் அடியேனும் பங்கு கொண்டிருந்தேன். இதனை வாழ்க்கையில் ஒரு பெரும் பயன் எனக்கருதி அகமகிழ்கின்றேன்.

"இன்பத் தமிழையும் இறையருள் நெறியையும் நினைக்கின்ற பொழுதெல்லாம் இலங்கையை நினைக்காமலிருக்க முடியாது. சைவத் தமிழ்த் தொண்டனாக வாழவேண்டும் என்று விரும்பிய நம்மை இலங்கைத் தமிழ் அன்பர்கள் வண்ணப் பணித்து வருகவென்று வான் கருணை காட்டினார்கள். செந்தமிழும் சிவநெறியும் கண்ணெனப் போற்றி வளர்க்கின்ற அந்நாட்டு மக்கட்கு என்றும் ஓர் எளிய தொண்டன் என்பதை மிக மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொள்கின்றோம்" என ஈழ நாட்டு மக்களுக்கு அன்று கூறினார்கள்.

இன்றும் அடிகளார் அவ்வாறே ஒரு தொண்டனாக விளங்கி வருகின்றார்கள். அகில இலங்கை காந்தி சேவா சங்கத்து அன்பர்களின் அழைப்பை அவ்வப்போது ஏற்று ஈழ