பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

466

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்


தமிழாசையைத் துறக்காதவர்; உலகு உய்ய வேண்டும் என்ற ஆசையைத் துறக்காதவர்; இறைவன் திருவடியில் வைக்கும் பற்றைத் துறக்காதவர். இன்றைய சமய உலகில் அடிகளார். ஒரு புரட்சித் துறவி. இத் துறவியாரின் அருள் கனிந்த பேருள்ளத்திலிருந்து ஊற்றெடுத்துச் சுரக்கும் நல்லெண்ணங்களை இந்நூலில் பக்கத்திற்குப் பக்கம் காண முடிகிறது. அடிகளாரின் அருள்வாக்கில் தெய்வ ஒண்தீந் தமிழின் திருவருள் நலம் மணக்கிறது.

அடிகளாரின் திருவாய் மொழிகள் நம்மை சிந்திக்க வைக்கின்றன. சான்றாகச் சில காண்போம். "சொர்க்கத்தின் வாயிலைத் திறக்கும் சாவி கடமையேயாகும்” (பக்.94),

"சொற்கள் ஈரக் கசிவுடையனவாக இருக்க வேண்டும் என்பது பற்றியே போலும்-சொல்லை வழங்கும் நாவினைச் சுற்றி ஈரப்பசை எப்பொழுதும் இருக்க உமிழ்நீர்ச் சுரப்பிகளை இயற்கை அமைத்தது (பக்.39).

பொறிகளின் வலிமை புன்தொழிலை வளர்க்கும். புலன்களின் தூய்மை புண்ணியத்தைச் சேர்க்கும்" (பக்.7).

பண்டைநாட் சிவஞான முனிவரும், இராமலிங்க வள்ளலாரும், பாம்பன் சுவாமிகளும் இன்ன பிறரும் ஒருருக் கொண்டு திருவவதாரம் செய்தாற் போல இற்றை நாள் நம்மிடையே வாழ்ந்து வரும் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களை நாத்தழும்பேற வாழ்த்துவதேயன்றி பாராட்ட என்ன இருக்கிறது? வாழ்க அடிகளார்!

அடிகளாரின் திருவாக்குகளைத் தொகுத்தளிப்பதன் மூலம் தமிழுலகிற்கும், சமய உலகிற்கும் கலைவாணி புத்தகாலய அதிபர், நண்பர் சீனி. திருநாவுக்கரசு அவர்கள் அருந்தொண்டு புரிந்துள்ளார். அவரது அரும் பணிகள் நாளும் சிறந்திட வாழ்த்துகிறேன்.

மாநிலக் கல்லூரி

இன்னணம்,

சென்னை-600 005

மெ. சுந்தரம்