பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

503


மக்களின் பெருமை தமிழ் மொழியின் வளர்ச்சியின் அடிப்படையில் அமைய வேண்டும் என்று தெரிவித்து தவத்திரு அடிகளார் தமிழ் இலக்கியத்தில் உள்ள சிலவற்றை மட்டுமே நம் கண்கள் முன் ஓவியங்களாக நிறுத்தி நம்மையெல்லாம் மகிழ்விக்கச் செய்துள்ளார், தவத்திரு அடிகளாருடைய தமிழ் அறிவு மிக ஆழமானது. தமிழ் மக்களுடைய பண்பாட்டில் அவருடைய ஈடுபாடு மிகச் சிறந்தது. தமிழ் இலக்கியம் நமக்குத் தரும் ஆன்மீக நெறியில் அவருக்கு உள்ள பற்று யாவரையும் ஈர்க்கத்தக்கத் திறமைவாய்ந்தது. அவருடைய எழுத்தின் நடை சிந்தனைத் தெளிவைக் காட்டுகின்றது. இத்தனையும் மனதில் வைத்து தமிழ் அமுதினைப் படிக்கும் பெரியோர் நல்ல பயன் பெறுவர். ஐயமில்லை.

இந்த நூலின் பதிப்பாசிரியர் "அன்புக்கொண்டல்” திரு. சீனி. திருநாவுக்கரசு அவர்கள் பல ஆண்டுகளாக அவருடைய சொந்த நிறுவனமான கலைவாணி புத்தகாலயத்தின் மூலம் தமிழுக்கும், ஆன்மீகத்திற்கும், எளிமையுடனும், நேர்மையுடனும் திறம்பட பணியாற்றி வருகின்றார்கள். அவருடைய அன்புணர்வினையும், மொழிப்பற்றினையும், இறைநெறி மீது உள்ள ஆழ்ந்த நம்பிக்கையையும் பல நண்பர்கள் நன்கு அறிவார்கள். சுயநலம் பாராது, லாப நோக்கின்றித் தமிழ் இலக்கியம் எங்கும் பரந்து நிற்க வேண்டும் என்கின்ற ஒரே கொள்கையுடன் தரமுள்ள நூல்களை, பல இன்னல்களுக்கிடையே பிரசுரித்து வருகின்ற முயற்சி எல்லோராலும் பாராட்டத்தக்கது. எளிமையே உருவான அவருடைய குடும்பத்தில் இருக்கும் எல்லோருமே இந்தத் தூய்மையான பணியில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றார்கள். அவருடைய தொண்டு உணர்வினைத் தமிழ் கூறும் நல்லுலகம் பாராட்டி வரவேற்பது கடமையாகும் என்று கருதுகிறேன்.

டி.வி. வெங்கட்டராமன், I.A.S