பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

518

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்


பெயரிட்டழைக்கிறோம். மாற்றம் இயற்கையாக நிகழும் ஒன்று. இந்த இயற்கை நிகழ்வைத் தடைப்படுத்தும் வல்லாண்மைகளை ஒடுக்கப் பிறப்பவர்கள் எழுதுகோல் வேந்தர்கள். உலகின் மறுமலர்ச்சிகள் பலவற்றில் எழுது கோல்களே உந்து சக்தியாய் உரம் பெற்றுள்ளன.

இத்தகு சீரிய நோக்கில், தமிழ் மாமுனிவர், தவத்திரு அடிகளார். அவர்களின் வானொலிச் சொற்பொழிவுகளை அன்பு நண்பர் திரு. சீனி. திருநாவுக்கரசு அவர்கள் சமுதாயத்திற்குப் பயனளிக்கும் வகையில் சமுதாய மறுமலர்ச்சி' எனும் அழகான நூலாகப் பதிப்பித்துள்ளார். சென்னை, திருச்சி, மதுரை வானொலிகளில் ஆற்றிய பொழிவுகளின் தொகுப்பே இந்நூல், அளவிற் சிறிதெனினும் ஆற்றலில் பெரியதாய், ஆன்றவிந்தடங்கிய கொள்கை விளக்கமாய்த் துலங்குகிறது இந்நூல்.

சமுதாய மறுமலர்ச்சியில் இலக்கியங்கள், நாட்டுப் பற்று, ஒற்றுமை, உழைப்பு, மதம் சொல்லும் மந்திரங்கள், மோதியின் சிந்தனைகள், சட்டத்தின் ஆட்சி, சடங்குகளைத் தவிர்ப்போம், மனித அன்பு, கிராமங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி, புத்தாண்டுச் சிந்தனைகள், மகாவீரர் பிறந்த நாள் சிந்தனைகள், 'மே' தினச் சிந்தனைகள், எனப் பனிரெண்டு சொற்பொழிவுகள். ஒவ்வொன்றும் நம் சிந்தைக்கு விருந்தாய்; சீரிய கருத்துப் புதையலாய் கை கோர்த்து நிற்கின்றன. காலத்தால் நல்வரவு கூற வேண்டிய கவினார்ந்த முயற்சியை நூல் முழுதும் காணலாம்.

பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

எனச் சங்க இலக்கியம் தொடங்கி,