பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


போற்றிப் பாராட்டுதலுக்குரிய தலை சிறந்த தமிழறிஞர்கள் இருந்தனர். அவர்களுள் 'நாட்டார்' என்று அழைக்கப் பெற்ற ந.மு. வேங்கடசாமி நாட்டார், சர்க்கரைப் புலவர், சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை, நாவலர் சா. சோமசுந்தர பாரதியார், அருட்டிரு விபுலானந்த அடிகள் ஆகியோர் நினைவுகூரத்தக்க பேரறிஞர்கள்! இந்தப் பெரியவர்களுடன் எல்லாம் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு, 'பால் ஊற்றும் பைய'னாக இருந்த நமக்குக் கிடைத்தது!

நமது வீட்டுக்கு அப்போது தொழில் பால் வியாபாரம். நாள்தோறும் காலையிலும் மாலையிலும் பால் ஊற்றச் சென்றகாலம். வாழ்க்கையின் அடிப்படைகள் அமைந்த காலம். இவர்களுள்ளும் 'சொல்லின் செல்வர்' ரா.பி. சேதுப்பிள்ளை, தமிழ் கற்கும் ஆர்வத்தைத் துரண்டி வளர்த் தார்கள். பிள்ளையவர்களுடைய வீட்டுக்குச் செல்லும்போது அவருடைய அறையின் ஜன்னல் அருகில் நின்று ஒரு குறள் சொல்ல வேண்டும். குறள் ஒப்பிக்கும் நமது குரல் கேட்டவுடன் பிள்ளையவர்கள் காலனா கொடுப்பார்கள்.

சாதாரணமாகப் பிள்ளையவர்கள் பிரியமாக நடத்தினார்கள். நாம் திருவேட்களம் தொடக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும்போது சாரணர் குருளையர் அணியில் சேரும்படி ஆசிரியர் கூறினார். நாமும் ஒப்புக்கொண்டோம். ஆனால், வீட்டில் குருளையர்க்குரிய சட்டை தைத்துக் கொடுக்க மறுத்து விட்டார்கள். வசதிக்குறைவே காரணம். அன்று பாலூற்றச் சென்றபொழுது பிள்ளையவர்கள் முகப்பிலேயே உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தார்கள். நாம் பாலை, வீட்டுக்கு முன்வந்தவரின் பாத்திரத்தில் ஊற்றிவிட்டு பிள்ளையவர்கள் முன்வந்து நின்றோம். அன்றைய குறளை ஒப்பித்தோம். எந்தக் குறள் என்பது சரியாக நினைவில் இல்லை, ஆனால், ஈதல் அதிகாரத் தொடர்புடைய குறள் அது! ஏன் எனில், திருக்குறளைக் கேட்ட பிள்ளை அவர்கள் "என்ன