பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்றார், தனிமனிதனின் வறுமையைச் சமூகத்தின் பொறுப்பாகக் கூறி, வறுமையை மாற்றாத ஜகத்தினை அழித்திடலாம் என்றான் பாரதி!

'தனி ஒருவனுக்கு உணவிலையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்.'

என்பது பாரதி வாக்கு! பலர் இறவாத இன்ப அன்பு நிலை அடைந்திட ஒருவர் நரகம் புகலாம் என்ற ராமானுஜரின் வழியைச் சிந்தனை செய்வோம்! அவர்களின் அடிச் சுவட்டில் நடப்போம்.


5

ருமபுர ஆதீனத்தில் நாம் சேர்ந்து தம்பிரானான பிறகு நமக்கு முதலில் திருக்கடவூரிலும், அடுத்து சீகாழி சட்டை நாதசுவாமி திருக்கோயிலிலும் கட்டளைத் தம்பிரான் பணி, சீகாழியில் பணியிலிருந்தாலும் தருமபுரத்தில் தங்கிப் படித்துக் கொண்டு வார விடுமுறைகளில் சீகாழிக்குப் போய்த் திருக்கோயில் பணிகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

கட்டளைத் தம்பிரான் பதவி ஓர் அணியேயாம். பணிப்பொறுப்புகள் அதிகம் இராது: நாம் சீகாழியில் கட்டளைத் தம்பிரானாக இருந்தபோது (1948-49) மாவட்டக் கழகங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. மாவட்டக் கழகத் தேர்தலில் காங்கிரஸும் நீதிக்கட்சியும் போட்டியிட்டன. நமக்குக் காங்கிரஸ் மீது இளைமையிலிருந்தே ஆர்வம். சுபாஷ் சந்திரபோஸ், பண்டித ஜவஹர்லால் நேரு ஆகிய தலைவர்கள் மீது பக்தியென்றே சொல்ல வேண்டும். அப்போது பெருந்தலைவர் காமராஜர், மாவட்டக் கழகத் தேர்தல் பிரச்சாரத்துக்குச் சீகாழி வரும் செய்தி கிடைத்தது. உடனே சீகாழிக்குச் சென்று பெருந்தலைவர் காமராஜருக்கு வரவேற்புக் கொடுப்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தோம்.