பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

97



வடமொழி வழக்கில் வசிஷ்டரும், தமிழ் வழக்கில் திருநாளைப்போவாரும் முறையாக வளர்ந்து உயர் வருணத்தை எய்தினர். அதை அன்றைய சமூகம் ஏற்றுக் கொண்டது. வசிஷ்டர் காலத்தில் எளிதாக இருந்த ஒன்று, திருநாளைப் போவார் காலத்தில் கடுமையாக இருந்தது என்பதை உய்த்துணர முடிகிறது. ஆனாலும், திருநாளைப் போவார் காலத்தில் உரிமைகள் முற்றாக மறுக்கப்பட வில்லை என்பது உண்மை.

திருவள்ளுவர் காலத்தில் குலம், குடி என்ற சொற்களுக்கிருந்த பொருள் வேறு. மாணிக்கவாசகர், அப்பரடிகள் காலத்தில் குலம் என்ற சொல்லுக்குரிய பொருள் திரிந்து போயிற்று. அப்பரடிகள் காலத்தில் குலம் என்ற சொல் பிறப்பின்வழி சாதியைக் குறிப்பதாக அமைந்து விட்டது. அதனால் அப்பரடிகள்,

சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்
கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்?

என்று கேட்கிறார். மாணிக்கவாசகரும்,

சாதி, குலம் பிறப்பென்னும் சுழிப்
பட்டுத் தடுமாறும் ஆதமிலி நாயேனை

என்று குறிப்பிடுகின்றார். இங்குக் குலம் என்பது உயர் பொருளில் கையாளப்பெறவில்லை. திருவள்ளுவர் காலத்தில் குலம் என்ற சொல் குறிப்பிட்ட பண்பின் வழிக் கூடி வாழும் சிலரைக் குறித்தது. குலத்தின் இலக்கணமாகத் திருவள்ளுவர் கூறுவது நற்பண்புகளேயாம். பிறப்பை யாண்டும் குறிப்பிட வில்லை. குலம் என்பது ஒரிடத்தில் தொகுதியாக ஒரு நெறியில் கூடி வாழும் சிலரைக் குறிப்பதாகும். இந்தக் குல அமைப்பு, வேறுபாடுகளைத் தோற்றுவிக்காது உயர்வின் புலே உய்த்துச் செலுத்தும்.தி2.7